காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் – காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்

ஜம்மு: காஷ்மீரில் வசிக்கும் இந்து பண்டிட் சமூகத்தினருக்கு அநீதி இழைத்த விவகாரத்தில் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

ராகுல் காந்தி தொடங்கிய பாரத ஒற்றுமைப் பயணம் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. ஜம்முவில் நேற்று நடைபெற்ற பாத யாத்திரையின் போது ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

இன்று காஷ்மீரி பண்டிட்டுகளின் பிரதிநிதிகள் என்னை சந்தித்து இங்கு நடக்கும் அவலநிலை குறித்து தெரிவித்தனர். காஷ்மீரி பண்டிட்டுகள் ஏராளமான பிரச் சினைகளை சந்தித்து வருகின்றனர். தீவிரவாதிகள் தாக்குதல், உள்ளூர் மக்களிடமிருந்து வரும் எதிர்ப்பு, அரசு வேலைகளில் இருக்கும் பண்டிட்டுகளுக்கு எதிர்ப்பு என பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றனர்.

அண்மையில் தங்களது பிரச் சினைகள் குறித்து புகார் கொடுக்க துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவிடம் சென்றுள்ளனர். அப்போது, அந்தக் குழுவினரிடம் பிச்சை எடுக்காதீர்கள் என்று துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளார்.

இதன்மூலம் காஷ்மீரி பண்டிட் டுகளுக்கு அநீதி இழைத்துள்ளார் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா. நான் இந்த விவகாரத்தில் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவிடம் ஒன்று கேட்க ஆசைப்படுகிறேன். காஷ்மீரி பண்டிட்டுகள் பிச்சை எடுக்கவில்லை. அவர்கள் தங்களது உரிமையைத்தான் கேட்கிறார்கள். எனவே நீங்கள் (மனோஜ் சின்ஹா) அவர்களிடம் (காஷ்மீரி பண்டிட்டுகள்) மன்னிப்புக் கேட்கவேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

சரியான பெண் கிடைக்கும் போது திருமணம்: கர்லி டேல்ஸ் என்ற யூடியூப் சேனலுக்கு ராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

எனக்கு எப்போது திருமணம் நடக்கும் என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது. நான் திருமணத்துக்கு எதிரி அல்ல. என் பிரச்சினை என்னவென்றால், என் பெற்றோர் காதலித்து அழகான திருமணம் செய்தனர். ஆதலால் என்னுடைய அளவுகோல் உயர்வாக இருக்கிறது. சரியான பெண் கிடைக்கும் போது நிச்சயம் திருமணம் செய்வேன். அதாவது, அந்தப் பெண் என் கூடவே வர வேண்டும். இப்படித்தான் பெண் இருக்க வேண்டும் என்ற அளவுகோல் இல்லை. அன்பாகவும், அறிவார்ந்தவராகவும் இருக்க வேண்டும். நடை பயணத்தின்போது நான் சாப்பிட்ட தெலங்கானா உணவுகள் சிறிது காரமாக இருந்தன. எங்கள் வீட்டில் இந்திய மக்கள் சாப்பிடும் உணவுதான் சமைக்கிறோம். இரவு நேரத்தில் மட்டும் உணவு சற்று மாறுபட்டு இருக்கும்

பெரும்பாலும் இனிப்பு வகைகள் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுவேன். எனக்கு பிடித்த உணவுகள் என்றால், சிக்கன் டிக்கா, ஷேக் கபாப், ஆம்லெட் பிடிக்கும், காலைநேரத்தில் காபி குடிக்க பிடிக்கும். நான் பெரும்பாலும் டெல்லியில் இருந்தால், மோதி மஹால், சாஹர், ஸ்வாகத், சரவண பவனில் சாப்பிடப் பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.