கொலிஜியம் விவகாரம்: நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு தீவிரம் காட்டுவது ஏன்?!

ஜனநாயகத்தின் மூன்று முக்கியத் தூண்களில் ஒன்றான நீதித்துறை, சுயேச்சையாகவும் சுதந்திரமாகவும் இயங்கிவருகிறது. நீதித்துறைக்கான சுதந்திரத்தை இந்திய அரசியல் சாசனம் உறுதிசெய்திருக்கிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே மோதல் நிலவிவருகிறது.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட கொலிஜியம் அமைப்பால், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்வுசெய்யும் நடைமுறை 1998-ம் ஆண்டிலிருந்து இருந்துவருகிறது. இந்த முறையை மாற்ற வேண்டும் என்பது பா.ஜ.க அரசின் நிலைப்பாடு. எனவே, கொலிஜியம் முறைக்கு மாற்றாக, ‘தேசிய நீதிபதிகள் நியமனக் குழு’ என ஓர் அமைப்பை ஏற்படுத்தி, அதற்கான சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய நீதிபதிகள் நியமனக் குழுவை அமைத்து மத்திய அரசு இயற்றிய சட்டத்தை 2015-ம் ஆண்டு ரத்து செய்தது.

அப்போதிலிருந்து மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே மோதல் போக்கு இருந்துவருகிறது. நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக்கொள்ளும் இந்த நடைமுறையை எதிர்க்கும் மத்திய அரசு, ‘கொலிஜியம் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை’ என்று சொல்லிவருகிறது. இந்த மோதலின் ஒரு பகுதியாக, கொலிஜியம் வழங்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் செய்கிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திசூட் தலைமையிலான கொலிஜியத்தில் கே.எம்.ஜோசப், எஸ்.கே.கௌல் உள்ளிட்ட நீதிபதிகள் இடம்பெற்றிருக்கிறார்கள். தற்போது, கொலிஜியம் பரிந்துரைத்த மூன்று நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கிறது. வழக்கமாக, கொலிஜியத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கவில்லையென்றால், அதற்கான காரணம் எதுவும் பொதுவெளியில் வராது. ஆனால், இப்போது நீதிபதிகள் நியமனத்துக்கு மத்திய அரசு மறுக்கும் காரணத்தை கொலிஜியம் பொதுவெளியில் வெளியிட்டிருக்கிறது.

வழக்கறிஞர் சோரப் கிர்பாலை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு கொலிஜியம் அளித்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்கவில்லை. ‘அவர் தன்பாலின உறவில் இருப்பவர். மேலும் அவரின் இணையர் வெளிநாட்டவர்’ என்பதுதான் மத்திய அரசு சொன்ன காரணம். அதை கொலிஜியம் வெளியே தெரிவித்துவிட்டது. நிராகரிப்புக்கு மத்திய அரசு சொன்ன அந்தக் காரணம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்

மூத்த வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யனை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கான கொலிஜியத்தின் பரிந்துரையையும் மத்திய அரசு நிராகரித்துவிட்டது. ‘பிரதமர் மோடி தொடர்பான ஏற்கெனவே வெளியான ஒரு செய்தியை தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஜான் சத்யன் பகிர்ந்தார்’ என்பதுதான் மத்திய அரசின் நிராகரிப்புக்கான காரணம். இதையும் கொலிஜியம் பொதுவெளியில் தெரிவித்துவிட்டது. ‘ஏற்கெனவே வெளியான ஒரு செய்தியை சமூகவலைத்தளத்தில் ப்கிர்ந்தது ஒன்றும் நீதிபதியான நியமனம் செய்வதற்கான விதிகளை மீறிய செயல் அல்ல’ என்பது கொலிஜியத்தின் கருத்து.

கொலிஜியம் தொடர்பான எதிர்க் கருத்துக்களை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடர்ச்சியாக முன்வைத்துவந்த நிலையில், சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தில் குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கரும் களமிறங்கியிருக்கிறார். அவர், ‘தேசிய நீதிபதிகள் ஆணையத்தை மீண்டும் கொண்டுவருவதற்கு காலம் கடந்துவிடவில்லை’ என்றார்.

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்

மேலும், ‘அரசியலமைப்புச் சட்டத்தின்படி சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இருக்கிறது. அவ்வாறு இயற்றப்பட்ட தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை நீதிமன்ற உத்தரவால் ரத்துசெய்ய முடியாது’ என்றும் ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.

நீதிபதிகளைத் தாமே நியமிக்க முடிவெடுத்ததன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் மீறியிருப்பதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எஸ்.சோதி ஒரு பேட்டியில் கூறினார். அதை, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

கொலிஜியம் நடைமுறையை ஒழித்துக்கட்டிவிட்டு, தாங்கள் விரும்புகிற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மத்திய பா.ஜ.க அரசு உறுதியாக இருப்பது ஜக்தீப் தன்கர், கிரண் ரிஜிஜு உள்ளிட்டோரின் பேச்சுகளிலிருந்து தெரியவருகிறது.

கிரண் ரிஜிஜு

நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு இருக்கிறது என்ற விமர்சனம் கடந்த சில ஆண்டுகளாக இருந்துவருகிறது. தாங்கள் விரும்புகிற நபர்கள் நீதிபதிகளாக வர வேண்டும் என்று ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள் என்று சொல்லப்படும் நிலையில்தான், கொலீஜியம் நடைமுறையை மாற்ற வேண்டும் என்பதில் மத்திய பா.ஜ.க அரசு பிடிவாதமாக இருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.