புறம்போக்கு நிலங்களை மக்களுக்கு வழங்கும் நடைமுறை: தமிழக அமைச்சருடன் ஆந்திர அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் அரசு புறம்போக்கு நிலங்களை தகுதியான பயனாளிகளுக்கு வழங்கும் நடைமுறை தொடர்பாக, ஆந்திர அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் குழுவினர், தமிழக வருவாய் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இது தொடர்பாக வருவாய்த் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆந்திர அரசு புறம்போக்கு நிலங்களை தகுதியான பயனாளிகளுக்கு வழங்குவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, அம்மாநில வருவாய்த் துறை அமைச்சர் தர்மான பிரசாத் யாதவ் தலைமையில், சமூகநலத் துறை அமைச்சர் மெருகு நாகார்ஜுனா, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் ஆடிமூலபு சுரேஷ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொரமுட்ல சீனிவாசலு (கோடூரு), கோனேட்டி ஆதிமூலம் (சத்தியவேடு), ஜொன்னலகட்டா பத்மாவதி (சிங்கனமாலா) மற்றும் ஆந்திர நில நிர்வாக கூடுதல் முதன்மை ஆணையர் இம்தியாஸ், இணைச் செயலர் கணேஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது.

இக்குழுவினர், அரசு நிலத்தை பயனாளிகளுக்கு வழங்குவது தொடர்பாக, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகளுடன் ஆலோசிப்பதற்காக சென்னைக்கு நேற்று வந்தனர்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் ராமச்சந்திரன், வருவாய்த் துறை செயலர் குமார் ஜெயந்த், நில நிர்வாக ஆணையர் சீ.நாகராஜன், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் அரசு புறம்போக்கு நிலங்களை தகுதியான பயனாளிகளிடம் ஒப்படைக்கும்போது பின்பற்றப்படும் நடைமுறைகள், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், இணையவழியிலான ஆவணப் பதிவு குறித்தெல்லாம், வருவாய்த் துறைச் செயலர் மற்றும் நில நிர்வாக ஆணையர் ஆகியோர், ஆந்திரக் குழவினருக்கு விளக்கினர்.

மேலும், அரசு நிலம் ஒப்படைப்பு, நிலச் சீர்திருத்த மற்றும் நில உச்சவரம்பு சட்டங்கள் தொடர்பாக ஆந்திரக் குழுவினரின் பல்வேறு சந்தேகங்களுக்கு, தமிழகஅதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

பின்னர், தமிழகத்தில் நில ஆவணப் பராமரிப்பு, நில ஒப்படைப்பு நடைமுறைகளைக்கணினிமயமாக்கியது தொடர்பாக, தமிழக அரசுக்கு ஆந்திரக்குழுவினர் பாராட்டுத் தெரிவித்தனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.