"மகா பெரியவா சீரியலை அனைத்து சமூகத்தினரும் பார்க்கும்படியாக உருவாக்கியுள்ளேன்" – பாம்பே சாணக்யா

‘மகா பெரியவா’ என்று அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி நினைவு நாளையொட்டி, வரும் ஜனவரி 7-ம் தேதி சங்கரா டிவியில் ‘மகா பெரியவா’ தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

இத்தொடரை, இயக்கியுள்ள இயக்குநர் பாம்பே சாணக்யாவிடம் பேசினோம், “இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு அக்ரஹார வாழ்க்கை முறை பற்றியும் நம் பண்பாடு, கலாசாரம் போன்றவற்றை எடுத்துரைக்கும் ‘கர்மா’ என்றொரு சீரிஸை இயக்கியிருந்தேன். அதற்கு, யூடியூபில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழக மக்கள் மட்டுமல்லாமல் அமெரிக்கா, கனடா, வியட்நாம் எனப் பல நாடுகளிலிருந்தும் ‘அக்ரஹார வாழ்க்கையை ரொம்ப தத்ரூபமா எடுத்துருக்கீங்க. ஏன் மகா பெரியவரைப் பற்றி ஒரு சீரிஸ் பண்ணக்கூடாது?’ என்று அக்கறையோடு கேட்டார்கள்.

சந்திரசேகரேந்திர சரஸ்வதி

இப்படித் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது, எனக்கு தெய்வத்தின் குரலாகவே கேட்டது. உடனே, ‘மகா பெரியவா’ தொடரை இயக்க முடிவெடுத்தேன். மகா பெரியவாவின் அனுகிரகத்தால்தான் இந்தத் தொடரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது” என்பவர் கதை குறித்துப் பேசினார்.

“மகா பெரியவாவின் போதனைகள் அடுத்த தலைமுறைக்குப் போய் சேரவேண்டும் என்பதுதான் எனது நோக்கம். அதற்கு, நாடக வடிவம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதனால், இதனை நான்கு தலைமுறைகள் சேர்ந்த ஒரு குடும்பத்தின் கதையாக உருவாக்கியுள்ளேன். சீரியலில் குடும்பத் தலைவர் மகா பெரியவருடன் வருடக்கணக்கில் கூடவே இருந்தவர். அவருக்கு ஒரு பிள்ளை, பேரன், கொள்ளுப்பேரன் இருக்கிறார்கள். அமெரிக்காவிலிருக்கும் அந்தக் கொள்ளுப்பேரன் இந்தியா வருகிறான். அதிலிருந்து, கதை ஆரம்பிக்கிறது. அந்தக் கொள்ளுப்பேரனுக்கும் கொள்ளுத்தாத்தாவுக்குமான உரையாடல்கள்தான் கதை.

உதாரணமாக, நமஸ்காரம் ஏன் பண்ணவேண்டும் என்று கேட்கும் கொள்ளுப்பேரனுக்கு, பெரியவர் மூலம் விளக்கம் வரும். அப்படித்தான், பூணூல் ஏன் போடவேண்டும், சந்தியாவந்தனம் ஏன் பண்ணவேண்டும் என்றெல்லாம் மகா பெரியவர் மூலம் காட்டியுள்ளேன். மகா பெரியவர் வாழ்ந்த காலத்தில் மனிதர்களிடம் பாகுபாடு பார்த்ததில்லை. பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கும் சென்றிருக்கிறார். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களும் பெரியவரைப் பின்பற்றியுள்ளார்கள். இதெல்லாம் சீரியலில் வரும்.

இதனை ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டுமல்லாமல் அனைத்து சமூகத்தினரும் பார்க்கும்படி உருவாக்கியுள்ளேன். அந்த எண்ணத்தில் இருந்து வெளியில் கொண்டுவர முயற்சியும் செய்துள்ளேன். மேலும், ‘மகா பெரியவரை நான் சந்தித்தேன். இந்த அற்புதமெல்லாம் நிகழ்ந்தது’ என்றெல்லாம் பலர் யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளார்கள். அதுமாதிரியான யாருடைய தனிப்பட்ட அனுபவங்களும் இதில் வராது. அதேநேரம், ஆவணப்படம் மாதிரியும் இருக்காது”.

உங்களைப்பற்றி?

“நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மும்பை. நாடகத்தின் மீதான ஈடுபாட்டால், கடந்த 1989-ம் ஆண்டு சென்னை வந்து கலாமந்திர் என்ற நாடகக்குழு மூலம் நாடகங்கள் நடத்தி வந்தேன். எங்கள் நாடகங்கள் வித்தியாசமாக இருந்ததால், பாலசந்தர் சாருக்குப் பிடித்துப்போனது. அதனால், என்னை அவருடனேயே வைத்துக்கொண்டார். அதிலிருந்து, அவரது இறுதிக் காலம்வரை, அவரது எல்லா சீரியலுக்கும் நான்தான் வசனம் எழுதினேன். அவரிடம் இணை இயக்குனராகவும் பணிபுரிந்தேன். கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து தனியாக நிறைய சீரியல், குறும்படங்கள் இயக்கி வருகிறேன்”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.