யாருக்கு இரட்டை இலை? பின்னால் ஓடும் அதிமுக… வரலாற்றை மாற்றிய ஈரோடு கிழக்கு!

கடந்த 1973 ஏப்ரல் 30 அன்று திண்டுக்கலில் இரட்டை இலை சின்னத்தை எம்.ஜி.ஆர் அறிமுகம் செய்து வைக்கிறார். இதுவரை உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன். இனிமேல் இதுதான் எனது சின்னம் எனக் கூறினார். அன்று முதல் இன்று வரை அதிமுக என்றால் இரட்டை இலை. இரட்டை இலை என்றால் அதிமுக என்பது மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. எம்.ஜி.ஆர் முதல் ஜெயலலிதா வரை தனிப்பெரும் சக்தியாக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பயணம் செய்தனர்.

கூட்டணி கட்சிகள்

திமுகவிற்கு போட்டியாக பலமான கட்சியாக வளர்ந்து நின்ற சூழலில் கூட்டணி கட்சிக்கு பின்னால் சென்று ஆதரவு கேட்ட வரலாறுகள் அதிமுகவிற்கு இல்லை என்றே சொல்கின்றனர். ஏனெனில் அதிமுகவிடம் வந்து தான் பலரும் ஆதரவு கேட்பார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டு வாசலில் காத்திருந்த எத்தனையோ கூட்டணி கட்சியினரை வரலாறு பார்த்திருக்கிறது. கூட்டணி முடிவாகும் முன்பு, வேட்பாளர் இறுதி செய்யப்படுவதற்கு முன்பாக எந்த கட்சியிடமும் அதிமுக ஆதரவு கேட்டதில்லை.

எதற்கெடுத்தாலும் பாஜக

எடப்பாடி பழனிசாமி
,
ஓ.பன்னீர்செல்வம்
ஆகிய இருவரும் ஒற்றை தலைமைக்கான அதிகார போட்டியில் வரலாற்றையே திருத்தி எழுதி கொண்டிருப்பதாக தெரிகிறது. கட்சி விஷயமாக இருந்தாலும் சரி. தேர்தல் விஷயமாக இருந்தாலும் சரி. அதிமுகவின் மூத்த தலைவர்கள் பாஜகவின் பெயரை உச்சரிக்க தவறுவதில்லை. இதனை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் கண்கூடாக பார்க்கலாம். பாஜகவிடம் ஆதரவு கேட்டதையே பெருமையாக தலைவர்கள் பேசி வருகின்றனர்.

இரட்டை இலை சின்னம்

அதிமுகவில் இரு அணிகளும் வேட்பாளர்களை நிறுத்தினால் இரட்டை இலை சின்னம் முடங்கி விடும். அப்படி ஒரு சூழல் வரக்கூடாது. இரட்டை இலையை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று டெல்லிக்கு தூதுவிடும் வகையில் இப்படியான ஆதரவை கேட்கிறார்களா? எனவும் கேள்வி எழுப்புகிறது. இந்த விஷயத்தை கையிலெடுத்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சரியான முடிவை அறிவிக்காமல் மழுப்பலாக பதில் கூறி வருகிறார்.

ஓபிஎஸ் பகீர்

அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது. இன்னும் கால அவகாசம் இருக்கிறது. உரிய ஆலோசனை செய்து முடிவெடுப்போம் என்கிறார். மறுபுறம் பாஜக போட்டியிட்டால் அந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இது எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு போட்டியாக எடுக்கும் முடிவு தானே தவிர, அதிமுகவின் நலனுக்காக இல்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஏட்டிக்கு போட்டி

தமிழ்நாட்டில் அதிமுகவை விட பாஜக பலம் வாய்ந்த சக்தியா? அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய நிலையில் இங்கே அரசியல் சூழல் இருக்கிறதா? என்று கேட்க வைக்கிறது. கடைசியில் தங்கள் தரப்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துவிட்டார். நாங்கள் இருவரும் இணைந்து கையெழுத்திட்டால் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் நிலை உள்ளது.

ர.ர.,க்கள் கவலை

எடப்பாடி பழனிசாமி தாமாக முன்வந்து இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ததால் ஒரே ஒரு பதவியாக ஒருங்கிணைப்பாளர் பதவி தான் உள்ளது. எனவே இரட்டை இலை உறுதியாக எங்களுக்கே கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார். இப்படி பாஜகவை வைத்து அரசியல் முன்னெடுப்புகளை செய்வது அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் ரசிக்க மாட்டார்கள் என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.