இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலும், அவரது நீண்ட கால தோழியும், பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியும் நேற்று முன்தினம் திருமணம் செய்துகொண்டனர். அதியா, பிரபல் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆவார்.
திருமணத்திற்குப் பிறகு, தனது காதல் கதையை வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் ராகுல் நன்றி தெரிவித்தார். அவருடைய மாமனார் சுனில் ஷெட்டி, நான் மாமனாராக மாறியதில் மகிழ்ச்சி அடைவதாகவும், ராகுலுக்கு அப்பாவாகவும், அப்பாவாக நடிக்க விரும்புவதாகவும் கூறினார்.
கர்நாடகாவின் கந்தல் நகரில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் அவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு ராகுலுக்கும் அதியாவுக்கும் தொழில்முறை வேலைகள் இருப்பதால் ஐபிஎல் தொடருக்கு பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் நடைபெற்று வருவதால் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட ராகுலுக்கு நெருக்கமானவர்கள் யாரும் அவரின் திருமணத்தில் கலந்துகொள்ள இயலவில்லை. இருப்பினும், ராகுல் அவரது நெருங்கிய நண்பரான விராட் கோலியிடம் இருந்து விலை உயர்ந்த திருமண பரிசை பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதில், விராட் கோலி கே.எல்.ராகுலுக்கு ரூ.2.17 கோடி மதிப்பிலான BMW காரை பரிசாக வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. விராட் கோலி மட்டுமின்றி முன்னாள், இந்திய அணியின் கேப்டன் தோனியும் விலை உயர்ந்த பரிசு ஒன்றை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தோனியும் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என்றாலும், அவர் ராகுலின் திருமண பரிசாக ரூ. 80 லட்சம் மதிப்புள்ள கவாஸக்கி நிஞ்ஜா பைக்கை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தகவல் ராகுல், அதியா தரப்பில் இருந்து இன்னும் உறுதிச்செய்யப்படவில்லை.
மேலும், சுனில் ஷெட்டி தனது மகள், மருமகனுக்கு ரூ. 50 கோடி மதிப்பில் மும்பையில் சொகுசு அடுக்குமாடி வீட்டை வாங்கிக்கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோன்று, நடிகர்கள் சல்மான் கான் Audi காரும், ஜாக்கி ஷெராஃப் விலை உயர்ந்த வாட்ச் ஒன்றையும் பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது.