ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து உள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகின்றன.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது. இதில், மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ். இளங்கோவன் களமிறங்க உள்ளார்.

காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஈ.வி.கே.இளங்கோவனுக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல் ஹாசனை அண்மையில் சந்தித்த ஈவிகேஎஸ்.இளங்கோவன், இடைத்தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று, செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தார். இதற்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நின்றி தெரிவித்தார்.

இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு வழங்கியுள்ள கமல்ஹாசனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே. இளங்கோவன் அவர்களுக்குத் தமது ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்
கமல்ஹாசன்
அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.