சமூக வலைதள செய்திகளை தணிக்கை செய்வதா? இந்திய செய்தித்தாள் சங்கம் எதிர்ப்பு!| Censoring social media posts? Newspaper Association of India protest!

புதுடில்லி :மத்திய அரசு குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மை தன்மையை கண்டறியும் பொறுப்பு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பி.ஐ.பி., எனப்படும் பத்திரிகை தகவல் நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருப்பதற்கு, ஐ.என்.எஸ்., எனப்படும், இந்திய செய்தித்தாள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் கொள்கைகள், நிகழ்ச்சிகள், திட்டங்கள், சாதனைகள், அறிக்கைகள் உள்ளிட்டவற்றை, பி.ஐ.பி., வாயிலாக, அச்சு, காட்சி மற்றும் ‘டிஜிட்டல்’ ஊடகங்களுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது.

புகார்

இந்த நிறுவனம், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இது அதிகாரப்பூர்வமாக வழங்கும் செய்திகளை அனைத்து ஊடகங்களும் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், மத்தியஅரசு குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான பொய் செய்திகள் வெளியாகி வருகின்றன.

அதன் உண்மை தன்மையை கண்டறிய, தெளிவான நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. அதனால், பொய்யான தகவல்கள் மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருவதாக, பல ஆண்டுகளாகவே புகார் கூறப்பட்டு வருகிறது.

இந்த பொய் செய்தி விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, மத்திய அரசு பல்வேறு நடைமுறைகளை பரிசீலித்து வந்தது. இதையடுத்து, தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தம் மேற்கொள்ள, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த திருத்தத்தின் படி, மத்திய அரசு குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மை தன்மையை ஆராய்ந்து உறுதி செய்யும் பொறுப்பை பி.ஐ.பி.,க்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடுமையாக பாதிக்கும்

இதற்கான வரைவு முன்மொழிவை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இதற்கு, இந்திய செய்தித்தாள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசு தொடர்பான செய்திகளின் உண்மை தன்மையை கண்டறிந்து அதை கட்டுப்படுத்தும் பொறுப்பை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனத்துக்கு வழங்குவது முறையாக இருக்காது. இந்த முடிவு, இந்திய ஊடகங்களின் செயல்பாடுகளை கடுமையாக பாதிக்கும்.

இது, மத்திய அரசின் கொள்கைகள், செயல்பாடுகள் குறித்து எழுதப்படும் நேர்மையான விமர்சனங்களை இருட்டடிப்பு செய்யப்படும் வாய்ப்பை ஏற்படுத்திவிடும். எனவே இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

விவாதிக்க முடிவு

சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைதன்மையை கண்டறிய வேறு விதமான நடைமுறைகளை மத்திய அரசு கையாள வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊடகத்துறையினருடன் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:தனி நபர் தரவுகள் பாதுகாப்பு சட்டம் தொடர்பான ஆலோசனை முடிவடைந்து, மத்திய அரசின் பரிசீலனையின் கீழ் உள்ளது.

இது தொடர்பான அறிவிக்கை விரைவில் வெளியாகும். ‘ஆன்லைன்’ விளையாட்டுக்களை ஒழுங்குமுறைபடுத்துவது குறித்த அறிவிக்கை இம்மாதம் 31ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைதள செய்திகள் தொடர்பான உண்மை கண்டறியும் பொறுப்பு, பி.ஐ.பி.,யிடம் வழங்க சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களுடன் அடுத்த மாத துவக்கத்தில் தனியாக விவாதிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.