டெல்லி மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு : பின்னணி என்ன?

புதுடெல்லி,

250 இடங்களை கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த மாதம் 4-ந்தேதி தேர்தல் நடந்தது. 7-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. 3 மாநகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் தேர்தல் இது.

இந்த தேர்தலில் 134 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க.வோ 104 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்கள் கிடைத்தன.

மேயர் தேர்தல் ஒத்திவைப்பு

டெல்லி மாநகராட்சி மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 6-ந்தேதி நடக்க இருந்தது.

ஆனால் 10 மூத்த உறுப்பினர்களுக்கு முதலில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கு ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அப்போது மேயர் தேர்தல் நடைபெறாமல், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் கூட்டம்

இந்த நிலையில் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்காக டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று மீண்டும் நடைபெற்றது. இதுவரை இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சபையில் அனைத்து கவுன்சிலர்களும், நியமன உறுப்பினர்களும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அதைத்தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அமளியால் ஒத்திவைப்பு

அதைத்தொடர்ந்து பா.ஜ.க. கவுன்சிலர்கள் இருக்கையில் இருந்து எழுந்து, ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இருந்த இடங்களுக்கு சென்று முழக்கங்களை எழுப்பினர்.

அதைத்தொடர்ந்து இருதரப்பு கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது.

இதையடுத்து கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய பா.ஜ.க. கவுன்சிலர் சத்யசர்மா, சபையை ஒத்திவைத்தார்.

ஆனால் ஆம் ஆத்மி கவுன்சிலர்களும், மாநகராட்சிக்கு நியமன உறுப்பினர்களாக வந்துள்ள அக்கட்சியின் 13 எம்.எல்.ஏ.க்களும், 3 எம்.பி.க்களும் சபையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பா.ஜ.க. கவுன்சிலர்கள் சபைக்கு வரவேண்டும், மேயர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.

பா.ஜ.க. மேயர் வேட்பாளர் ரேகா குப்தாவும் தர்ணாவில் ஈடுபட்டார். ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் அமளியால்தான் சபை ஒத்திவைக்கப்பட்டது என அவர் கூறினார்.

இதுபற்றி ஆம் ஆத்மி கட்சியினர் கருத்து தெரிவிக்கையில், “மேயர் தேர்தலில் போதுமான அளவுக்கு ஆதரவு உறுப்பினர்கள் இல்லை என்பதால் கூட்டத்தை ஒத்திபோட்டு விட்டனர்” என கூறினர்.

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் மீண்டும் ஒத்தி போடப்பட்டிருப்பது பேசுபொருளாகி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.