2022இன் சிறந்த டி20 வீரர்… விருதை தட்டிச்சென்ற சூர்யகுமார் யாதவ்

ICC T20I Men’s Cricketer Of The Year: ஆசிய கோப்பையில் படுதோல்வி, டி20 உலகக்கோப்பையில் படுதோல்வி என இந்திய அணிக்கு 2022ஆம் ஆண்டு என்பது மிகவும் கசப்பானதாக அமைந்தது. ஆனால், இந்திய அணி ஒரு நட்சத்திர நாயகனின் ருத்ரதாண்டவத்தை கடந்தாண்டு கண்டுகளித்தது. 

ஆம், டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவின் தன்னிகரற்ற ஆட்டம், கடந்தாண்டின் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கிடைத்த ஆறுதல்களில் ஒன்று. ஆசிய கோப்பையில் ஆப்கன் அணிக்கு எதிராக விராட் கோலி அடித்த அவரின் 71ஆவது சர்வதேச சதம் என்பது இதில் இரண்டாம்பட்சம்தான். 

அந்த அளவிற்கு சூர்யகுமார் யாதவின் ஆட்டம் இருந்தது. சர்வதேச டி20 அரங்கில், ஓராண்டில் 1000 ரன்களை குவித்த முதல் இந்தியர் மற்றும் இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் அடைந்தார். அது மட்டுமின்றி, 1164 ரன்களை 187.43 என்ற அசுரத்தனமான ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்தார் என்பதுதான் கவனிக்கத்தக்கது.

விருது குறித்து சூர்யகுமார் பேசியது:

மறக்குமா நெஞ்சம்…

கடந்தாண்டில் டி20 அரங்கில் 2 சதங்களையும், 9 அரைசதங்களையும் அவர் அடித்திருந்தார். மேலும் கடந்தாண்டில் மட்டும் 69 சிக்சர்களை அடித்து, இதுவரை டி20 அரங்கில் யாரும் செய்யாததை நிகழ்த்திக்காட்டினார். 

அந்த வகையில், 2022ஆம் ஆண்டின் சிறந்த ஐசிசி சர்வதேச டி20 ஆடவர் கிரிக்கெட்டர் விருதை சூர்யகுமார் யாதவிற்கு கொடுத்துள்ளது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஐசிசி ஆடவர் T20I கிரிக்கெட்டர் விருதை வென்றவர், டி20  வரலாற்றில் எந்த வீரரும் பெற்றிராத ஒரு ஆகச்சிறந்த ஆண்டை பெற்றார். இங்கே, 2022ஆம் ஆண்டில் அவரது அதிரடியான மற்றும் அந்த ஆண்டின் தனித்துவமான ஆட்டங்களை இங்கு பார்ப்போம்.

2022ஆம் ஆண்டு முழுவதுமே பல முக்கிய ஆட்டங்களை அவர் விளையாடியுள்லார். ஆனால், அதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்றால், இங்கிலாந்தின் நாட்டிங்காமில் நடைபெற்ற போட்டியில், அதுவும் சிறந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக 55 பந்துகளில் 117 ரன்கள் குவித்து, தனது முதல் சர்வதேச டி20 சதத்தை அடித்தது எனலாம்” என குறிப்பிட்டுள்ளது. மேலும், தனது முதல் டி20 சதம்தான் மறக்க முடியாத இன்னிங்ஸ் என்று விருது பெற்ற பின், பிசிசிஐ வெளியிட்டுள்ள சூர்யகுமார் யாதவின் வீடியோவில் அவரே தெரிவித்துள்ளார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.