மாநிலங்கள் கடன் வாங்குவதில் மத்திய அரசு தலையீடு: நிதிஷ்குமார் குற்றச்சாட்டு

பாட்னா,

பீகாரில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்து ஆட்சி அமைத்த ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார், கடந்த ஆகஸ்டு மாதம் திடீரென கூட்டணி மாறினார். அவர் பா.ஜ.க. கூட்டணியை முறித்துக்கொண்டு, ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் மெகா கூட்டணியில் சேர்ந்து புதிய அரசை அமைத்தார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபடப்போவதாக நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அவர் பாட்னாவில் நிருபர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவரிடம் எழுப்பிய கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மத்திய பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:- ஒருவர் என்ன எதிர்பார்க்க முடியும்? பீகாருக்கு மத்திய அரசு பெரிய அளவில் உதவ வேண்டும், சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வைத்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

கடன் வாங்குவதில் தலையீடு

கேள்வி:- மத்தியில் ஆளும் கூட்டணியில் இருந்து நீங்கள் வெளியேறிய பிறகு நிலைமை மோசமாக மாறிவிட்டதா?

பதில்:- நாங்கள் கூட்டணியில் ஒன்றாக இருந்தபோதும் அவர்கள் மாநிலத்துக்கு என்று எதையும் செய்தது இல்லை. அவர்கள் அதைத்தான் இப்போதும் செய்கிறார்கள். ஏழ்மை நிலையில் உள்ள மாநிலங்களை முன்னேற்றாமல், அவர்கள் நாட்டை முன்னேற்றுவது குறித்து எப்படி எண்ண இயலும் என்பது எனக்கு வியப்பை அளிக்கிறது.

அவர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. அவர்கள் அரசியல் ஆதாயம் எதிர்பார்க்கிற இடங்களில் மட்டுமே தங்கள் கவனத்தைச் செலுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் அரசியல் லாபங்கள் குறித்து மிகையாக மதிப்பிடுவதுபோல தெரிகிறது.

நம்மைப்போன்ற ஏழை மாநிலங்கள், தங்களைத்தாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலைதான் உள்ளது. முன்பு மத்திய நிதி இல்லாதபோது அதைக் கடன் வாங்கி ஈடுகட்டினோம். இப்போது அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. இதுபோன்ற மத்திய அரசின் தலையீட்டை நாங்கள் ஒருபோதும் பார்த்தது கிடையாது என்று அவர் பதில் அளித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.