மதுரை: புலம்பெயர்ந்தவர்களின் நிலங்கள் போலி ஆதார் மூலம் அபகரிப்பு – கள ஆய்வில் அதிர்ச்சி!

மதுரை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து புலம்பெயர்ந்து சென்றவர்களின் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக்கணக்கு புத்தகங்கள் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்து அவர்களுக்கு உரிய சொந்தமான நிலங்கள் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்படுவது புதிய தலைமுறையின் கள ஆய்வில் அம்பலமாகியுள்ளது. 

மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை தவறாக பயன்படுத்துவதை முற்றிலும் குறைக்கும் நோக்கிலும், ஊழலை ஒழிக்கவேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான நோக்கத்திற்காகவுமே ஆதார் எண் திட்டதை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இந்நிலையில் ஆதார் திட்டமானது நடைமுறைக்கு வந்த ஆரம்பத்திலிருந்தே பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ச்சியாக தற்போது வரை சிக்கிவருகிறது. நாட்டு மக்களுக்கு ஆதார் மிகவும் முக்கியமானது என உணர்ந்த பின் இது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துமா என்ற சந்தேகங்கள் தற்போதுவரை பெரும்பாலும் பல மாநிலங்களில் பரவலாகியுள்ளன என்பதும் நிதர்சனமான உண்மையே.  

இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட பல கிராமங்களில் வசித்துவந்த மக்கள் இங்கிருந்து புலம்பெயர்ந்து சென்றபிறகு, அவர்களால் பராமரிப்பின்றி இருக்கும் அவர்களுக்கு சொந்தமான நிலங்கள் தற்பொழுது உரியவர்களின் கவனத்திற்கு செல்லாமல் அவர்களின் ஆதார் கார்டு, பேங்க் பாஸ்புக், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட தனிநபர்களின் ஆவணங்கள்  நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியாக தயாரித்து, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சொந்தமான நிலங்களை தனி நபர்களுக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்வது தற்பொழுது புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலமாகியுள்ளது.

image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் திம்மநத்தம் சுற்றியுள்ள நல்லொச்சான்பட்டி கல்லூத்து கிராமம், வையம்பட்டி, சுழி ஒச்சான்பட்டி, கொப்பிலி பட்டி, உத்தப்ப நாயக்கனூர் கிராமம், வகுரணி கிராமம், மொண்டிகுண்டு கிராமம், கோயில்பட்டி கிராமம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தனி மனிதர்களின் அடையாளத்தின் ஆவணங்களை போலியாக தயாரித்தது மட்டுமின்றி தாறுமாறாட்டம் செய்து பத்திரபதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து நில அபகரிப்பு பிரிவு போலீசார் மற்றும் மாவட்ட வருவாய்த் துறையினர் தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர். 

மேற்கண்ட கிராமங்களில் இதுவரை பல்வேறு நபர்களுக்கு சொந்தமான சுமார் 140க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் தனி நபர்களின் போலி ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள், போலி நபர், போலி கையெழுத்து மற்றும் போலி புகைப்படம் மூலம் பத்திரபதிவு செய்திருப்பதாக கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். அதிலும் குறிப்பாக பல்வேறு ஆவணங்களில் தமிழக அரசின் கோபுர முத்திரை மெட்டல் செய்யப்பட்ட சீல் அச்சின் மாதிரியும் போலியாக பயன்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

image

மேற்கண்ட கிராமங்களில் இருந்து புலம்பெயர்ந்து சென்றவர்களின் நிலங்கள் முறைகேடாக விற்பனை செய்யும் பொழுது விற்பவர் கையெழுத்து போடும் இடத்தில் அவரின் முக சாயலில் உள்ள மற்றொரு நபரை தேர்வு செய்து உரியவருக்கு பதிலாக கையெழுத்து போட வைத்திருக்கிறார்கள். இதில் பத்திரத்தில் கையெழுத்து போடுபவர்கள் தங்களின் சொந்த பெயரை மாற்றி போலி பெயரோடு எதற்காக கையெழுத்து போடுகிறோம் என்பதுகூட தெரியாமல் அழுத்தத்தின் காரணமாகவும், சிலர் பணத்திற்காகவும் கையெழுத்து போட்டு இருப்பது அம்பலம் ஆகியுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட நில அபகரிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு நில அபகரிப்பு போலீசாரால் இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க  சமன் அனுப்பியும் தற்போது வரை நேரில் விசாரணைக்கு வராமல் இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு புகார் வந்ததை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தற்பொழுது விசாரணை தீவிரபடுத்தப்பட்டு இருக்கிறது. 

image

இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தொடர்பு கொண்டு கேட்கும் பொழுது,

”இப்புகார்கள் தொடர்பாக நில அபகரிப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு புகார் வந்ததை தொடர்ந்து வருவாய் துறை வாரத்திற்கு ஒருமுறை இப்புகார் மீது விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேற்கண்ட விசாரணையின்போது புகார் அளித்தவர்கள் சமீபத்தில் தாக்கப்பட்டார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இப்புகாரின் விசாரணையில் முறைகேடு செய்து பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட உரிய நபர்களிடம் மீண்டும் அந்த நிலம் ஒப்படைக்கப்படும். இத்தோடு அதிக மக்கள் இதில் ஏமாற்றப்பட்டு இருப்பது தெரியவந்தால் இவ்வழக்கை மேல்விசாரணைக்கு மாற்றம் செய்ய அரசுக்கு பரிந்துரைக்கப்படும்” என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.