ரேஷன் அரிசி கடத்தல்: ராதாகிருஷ்ணன் வேதனை!

மதுரை திருநகரில் புதுப்பிக்கப்பட்டு, தரம் உயர்த்தப்பட்ட பாண்டியன் கூட்டுறவு சிறப்பு அங்காடியினை கூட்டுறவு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பதுகாப்புத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கூட்டுறவுத்துறையின் மூலம் கடந்த ஆண்டைப்போலவே கடன் வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு தற்போதுவரை கூட்டுறவு வங்கிகள் மூலம் 14 லட்சத்து 61 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.11 ஆயிரத்து 223.21 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சத்து 59 ஆயிரத்து 393 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அவர்களில் 2.08 லட்சம் பேருக்கு ரூ.1417.12 கோடி கடன் வழங்கியுள்ளோம்.

இந்த குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது வரை 1 லட்சத்து 41 ஆயிரத்து 302 விவசாயிகளிடம் 9 லட்சத்து 62 ஆயிரத்து 327 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1967.94 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதிகவிளைச்சலை எதிர்பார்கிறோம். அதற்காக 3504 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.” என்றார்.

தொடர்ந்து பேசிய ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் 25 ஆயிரம் நிரந்தர கடைகளும், 10 ஆயிரம் பகுதிநேர கடைகளும் உள்ளன. தமிழக அரசு கொண்டு வந்த நம்ம ஊரு நம்ம நியாய விலை கடை திட்டத்தின் கீழ் 4845 கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தோப்பூர், கப்பலூர் பகுதிகளில் நெல் சேமிப்பு கிடங்கில் திறந்த வெளியாக நெல் நனைவதாக கூறியதையடுத்து. தமிழகம் முழுவதும் 106 கிட்டங்கிகளில் ரூ.106 கோடி மதிப்பில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. முடிந்த அளவிற்கு தார்பாய்மூலம் நெல் மூடப்படுவதை தவிர்க்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. நியாயவிலைக் கடைகளில் கடத்தல் சம்பவம் வேதனையளிக்கிறது. அதனைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போதுவரை 13 ஆயிரம் வழக்குகளும், 132 பேர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

பொதுமக்கள் தேவையெனில் மடடுமே நியாவிலைக் கடைகளில் அரிசி வாங்க வேண்டும். தேவைப்படாதவர்கள் கெளரவ கார்டுகளாகவும் மாற்றிக்கொள்ளலாம். அது தவிர்த்து அரிசியைப்பிற நபர்களுக்கு தர வேண்டும். தரமான பொருள்கள் வழங்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. தரமற்ற பொருள்களை திரும்ப அனுப்பவும் கடைக்காரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பேசிய முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரும், தற்போதைய கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலருமான ராதாகிருஷ்ணன், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையக்கூடிய சாத்தியக் கூறுகள் உறுதியாக உள்ளன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 2014 இல் சாத்தியகூறு குறித்து ஆய்வு செய்யப்பட்டு 2015 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் இடம் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மதுரை உறுதிசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதுதான் முதல் தாமதம். பின்பு மருத்துவமனைக்கான இடத்தை மாநில அரசு வழங்க தயாராக இருந்தபோது கொரோனா வந்ததால் மத்திய அரசு பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஜூலை 2020 இல் மருத்துவமனை தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன் பின்பு காலதாமதத்தால் கட்டடம் கட்டுவதற்கான மதிப்பீடு உயர்ந்தது. அதனால் தாமதமானது. எனினும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை உறுதியாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.” என்றார்.

இந்த ஆய்வின்போது கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் குருமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் உசிலை சிவா, மதுரை மத்திய கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஜீவா, மதுரை மாவட்ட பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப் பதிவாளர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.