அதிக மதிப்பெண் எடுப்பவர்கள், அதிக நண்பர்கள் உள்ளவர்கள்; வாழ்க்கையில் வெற்றிபெறுபவர்கள் யார்?

உலகின் பல பல்கலைக்கழகங்களில் சுமார் 30 வருடங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளேன். இந்த காலத்தில் மாணவ மாணவிகளுக்கிடையேயான நட்பு மற்றும் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்தும், அவர்கள் வாழ்க்கையில் அடைந்த வெற்றிகள் குறித்தும் ஆராய்ந்தேன், அதனடிப்படையில் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

மதிப்பெண்களா? நண்பர்களா?

அதிக நண்பர்களைக் கொண்ட மாணவ, மாணவியர்கள் மத்தியில் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. பொதுவாக இவர்கள் மதிப்பெண்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவதும் இல்லை. சராசரி மதிப்பெண்ணில் திருப்தி அடைத்து விடுவார்கள். படிப்பைவிட நண்பர்களுடன் அரட்டை அடிப்பதே இவர்களது விருப்பமாக இருப்பதால், இவர்களில் சிலர் தேர்வாகத் தேவையான மதிப்பெண்கள் எடுக்கவும் சிரமப்படுவார்கள், ஆனால் திறமை இருக்கும்.

நிறைய மதிப்பெண்களை குவித்து வரும் மாணவ மாணவியர்களைக் கவனித்தால் பொதுவாக அவர்களுக்கு நட்பு வட்டம் மிகவும் சிறியதாக இருக்கும். இவர்களுக்குப் படிக்க நிறைய நேரம் கிடைக்கும். இதுவே அதிக மதிப்பெண்கள் எடுக்க முக்கியக் காரணமாக அமைகிறது.

பொதுவாகக் கல்வி நிறுவனங்கள் மாணவர்களை உருவாக்குகின்றன. வேலை தேடுவது மாணவர்களின் பொறுப்பு என்றாகிவிடுகிறது. அந்த வேலை தேடும் படலத்தில் யார் வெற்றி அடைகின்றனர் எனக் கணக்கிட்டேன்.  ஆச்சர்யமாக இருந்தது. சராசரி மதிப்பெண்களே பெற்ற,  நண்பர்கள் வட்டம் பெரிதாகவுள்ள மாணவ மாணவியர்கள்தான் விரைவில் தகுந்த வேலை வாய்ப்பை தேடிக் கொள்கிறனர்.

அதிக மதிப்பெண்கள் குவித்த மாணவ மாணவிகள் வேலையை பெறுவதில் சற்று சிரமப்படுகிறனர். இதற்கு முக்கியக் காரணம் பல்வேறு தரப்பு மக்களிடம் பேசுவது மற்றும் பழகுவது இவர்களுக்குக் கடினமாக உள்ளன.

தேர்வு எழுதும் மாணவர்கள்

சில வருடங்களுக்கு முன்பு என் வகுப்பில் ஒரு மாணவனைச் சந்தித்தேன். அவன் தலையில் அளவுக்கு அதிகமாக முடியும், முகத்தில் தாடியும் வைத்திருந்தான். அவன் கையில் ஐம்பது ரூபாயைத் திணித்தேன். நாளைக்கு வரும்போது முடி வெட்டி ஒரு மாணவன் மாதிரி வா எனக் கட்டளையிட்டு அனுப்பினேன்.

அந்த வகுப்பில் அனைவரும் அவனுக்கு நண்பர்கள்தான். விடுதியில் அவனுக்கு என்று ஒரு பெரிய நண்பர்கள் கூட்டமே உண்டு. ஒவ்வொரு தினமும் அவனுக்குத் திருவிழாதான். அவனைப் பொறுத்தவரை பல்கலைக்கழக வாழ்க்கை  தினமும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாகத்தான் இருந்தது. ஆனால் அவன் பொறுப்பானவன், நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் என்பதை நன்கு  உணரமுடிந்தது. ஆனால் அவனுக்குப் படிக்க மட்டும் நேரம் இருக்காது. நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பதே அவன் வாடிக்கை. மனது வைத்துப் படித்தால் இவன் நிறைய மதிப்பெண்கள் வாங்கமுடியும் என்பது என் கணிப்பு.

தேர்வுக்கு  ஒரு வாரத்திற்கு முன்பிருந்து அவன் செயல்பாட்டில் பெரும் மாற்றம் வரும். பெரும்பாலும் நன்கு படிக்கும் மாணவிகளின் மத்தியில்தான் இருப்பான். அவர்கள் படித்ததை இவனுக்குக் கதையாகச் சொல்லவேண்டும். அவர்கள் சொல்லுவதை அக்கறையாகக் கேட்பான். புரியவில்லை என்றால் கூச்சப்படாமல் சந்தேகங்களைக் கேட்பான். மாணவிகளும் சளைக்காமல் சொல்லிக் கொடுப்பார்கள். சில மாணவர்களும் இவனுக்குக் கதை சொல்லுவதைப் பார்த்திருக்கிறேன்.

மாணவர்களும் மாணவிகளும் கூட்டமாக இருந்து பேசுவது இங்கு மிகவும் இயல்பானதுதான். “ஒரு மாணவனும் ஒரு மாணவியும் தனியாகப் பல நாள்கள் கண்ணில் பட்டால் காதலாக இருக்குமோ?” என நினைக்கத் தூண்டும். ஆனால் கூட்டமாக இருந்து பேசும் போது அங்கு இந்த சிந்தனை வராது.  அவன் நோக்கமும் அது அல்ல. மாணவிகள் கூட்டத்தில் இவனை அடிக்கடி பார்க்கலாம். ஆனால் அங்கு ஓர் ஆரோக்கியமான நட்பொழுக்கம் இருக்கும்!

இவன் முதுகலை தேர்வில் தேர்வாகவே முடியாது என நான் நினைத்தது உண்டு. காரணம் சரியாகப் படிப்பதும் இல்லை மற்றும் இவனுக்கு ஆங்கிலம்  பேசுவதில் பயம்.  ஓரளவுக்கு எழுதுவான். அதனால் அவன் ஒரு வழியாகத் தேர்வு எழுதி விடுவான். அதனால் அவனுக்குத்  தேர்வாகத் தேவையான மதிப்பெண்கள் வாங்குவதில் சிரமம் இருக்காது.  ஆனால் மாதிரி வகுப்பு நடத்துவதற்கு (செமினார் எடுப்பது) மற்றும் தான் செய்த ஆய்வுகளை எடுத்துச் சொல்லுவதற்கு ஆங்கிலம் தேவை. இதனை வெற்றிகரமாக முடிக்க இவனுக்கு மாணவிகளின் தயவு தேவைப்பட்டது. அவர்கள் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள். அவர்கள் ஒவ்வொரு வாக்கியமாக  அவனுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள். ஆரம்பப் பள்ளி தரத்தில் இந்த பயிற்சி இருக்கும். வார்த்தைகளின் உச்சரிப்புகள், வாக்கியங்களின் இலக்கண அமைப்பு, எங்கே நிறுத்திப் பேசவேண்டும், எங்கே இணைத்துப் பேசவேண்டும் என அத்தனை பயிற்சிகளையும் மாணவியர்களே அவனுக்கு அளிப்பார்கள்.  தெரியவில்லை என அவர்களிடம் சொல்லக் கூச்சப் படமாட்டான். அவர்களிடமிருந்து அத்தனையையும் கேட்டு கற்றுக் கொள்வான். இந்த மாணவிகளின் உதவியால்தான் இவனால் முதுகலைப் பட்டப்படிப்பில்  தேர்வாக முடிந்தது. ஒரு வழியாகப் பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்வாகிவிட்டான்.

அதன்பின்  சில நாட்களில் எனக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது.  அந்த மாணவன்தான் பேசினான். தனக்கு வேலை கிடைத்ததாகக் கூறினான். அந்த வகுப்பில் படித்த 22 மாணவ மாணவிகளில் இவன்தான் முதலில் வேலை வாங்கினான்! “கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா?” எனக் கண்டறியும் வேலைதான் அவனுக்குக் கிடைத்தது. சென்னையில் பணியாற்றினான்.

என்ன வேலை

உடனே சக மாணவ மாணவியர்களைத் தொடர்பு கொண்டு விருப்பப்பட்ட அனைவருக்கும் வேலை வாங்கிக் கொடுத்தான். கொரோனா தொற்று கட்டுக்குள் வர இவர்களுக்கு வேலை இல்லாமல் போனது. இவன் சளைக்கவில்லை. சில நாட்களில் ஒரு உயிர் தொழில்நுட்பத் துறை சார்ந்த நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொண்டான். வகுப்பில் முதல் சில இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகள் வேலை தேடியபடி வீட்டில் இருக்க, இவன் சம்பளம் வாங்க ஆரம்பித்தான்! பின்னர் தன்னுடன்  படித்தவர்களுக்கும் வேலை தேட ஆரம்பித்தான் மற்றும் உதவினான்.

தனக்கு உதவிய மாணவிகளுக்கு இந்தியாவின் தலை சிறந்த உயிர் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களில் வேலை தேட தூண்டினான். நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் அவர்கள் தேறினர். பயிற்சி காலங்களை வெற்றிகரமாக முடித்து இவர்கள் தங்கள் வேலையை அங்கு நிரந்தரமாக்கிக் கொண்டனர். இந்திய அளவில் நிறையப் போட்டியாளர்களை வென்றுதான்  இவர்கள் இந்த வேலையைக் கைப்பற்றியுள்ளனர்.   இந்த வெற்றிக்குப் பின்னால் இந்த மாணவிகள் அந்த மாணவனுக்குச் சொல்லிக் கொடுத்ததால்  கிடைத்த அனுபவமும் ஒழிந்துள்ளது, அதேவேளையில் இன்று அவனுடன் ஒப்பிட்டால் இவர்கள் அதிகம் சம்பளம் வாங்குகின்றனர். நன்கு படித்தவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கத்தான் செய்கிறது என்பதை இதில் புரிந்து கொள்ள முடிகிறது.  

அள்ளி கொடுக்க கொடுக்க குறையாதது கல்வி. மாறாகச் சொல்லிக் கொடுக்கும் போது சிந்தனைத் தெளிவடையும். மேலும் அந்த துறையில் அறிவும் வலுவடையும். கேள்விகளைச் சட்டென்று புரிந்து பதிலளிக்கும் இயல்பு வந்துவிடுகிறது. இவை வேலைவாய்ப்பை எளிதாகப் பெற உதவுகிறது. 

அதே நேரத்தில் அதிக நண்பர்களைக் கொண்ட மற்றும் புதிய நண்பர்களை உருவாக்க வல்லவர்கள் விரைவில் வேலை தேடிக் கொள்கின்றனர். மற்றும் இவர்கள் வாழ்வை எளிதாக்கிக் கொள்கின்றனர்.

அவன் மறுபடியும் ஒரு நாள் தொலைப்பேசியில் அழைத்தான். “நம் வகுப்பில் உள்ள ஒரு மாணவி முனைவர் பட்டம் (PhD) சேர விரும்புகிறாள். உங்கள் ஆய்வகத்தில் இடமுள்ளதா?” எனக்கேட்டான்.

வேலை

“வரச்சொல் பார்ப்போம்” என்றேன். இப்படியாக இந்த மாணவன் வலம் வந்து கொண்டிருக்கிறான். அவன் வேலையாகும் நிறுவனத்தில் தன் வகுப்பு நண்பர்களையும் சேர்த்துக் கொண்டான்.

இவனின் வகுப்புத் தோழன் தனக்கு வேலை கிடைத்த அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டான். பாண்டிச்சேரியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு வேலை தேடி நேரடியாகச் சென்றானாம். காவலாளி அவனை உள்ளே விடவில்லையாம். ‘நான் முதுகலை உயிர் தொழில்நுட்பத் துறை படித்துள்ளேன். வேலை தேடி வந்திருக்கிறேன்’ எனக் காவலாளியிடம் கூறினானாம். காவலாளி ‘உனக்கு எந்த ஊர்’ என்று கேட்டாராம். இவன் ஊரைச் சொல்ல, ‘உன் ஊர்க்காரர் 7-வது அறையில் உள்ளனர். அவரைப் போய் பார்’ என்றாராம். இவன் அங்குச் சென்று அவரைப் பார்த்தானாம். உடனே வேலை கிடைத்து விட்டதாம். இந்த மாணவனும் அதிக மதிப்பெண் எடுக்காதவன்தான். ஆனால் நிறைய நண்பர்களைக் கொண்டவன். சுருங்கச் சொல்வது என்றால் நன்கு பேசத் தெரிந்தவன்! 

அதிக நண்பர்கள் மதிப்பெண்களுக்கு எதிரி என்பது உண்மை. அதே வேளையில் குறைவான நண்பர்கள் வட்டம் வேலை கிடைக்கும் வாய்ப்பைத் தள்ளிப் போடும் என்பதும் உண்மை. நல்ல நண்பர்கள் வட்டம் வாழ்வை எளிதாக்குவதுடன் இனிமையாக்குகின்றன என்பதுவும் உண்மை.

நான் விடுதியில் தங்கிப் படித்த போது அங்கு ஒரு மாணவன் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்றவனாகத் திகழ்தான். அவனிடம் சக மாணவர்கள் உதவி கேட்டுச் செல்வார்கள். அவன் உதவி செய்ய மாட்டான். தெரிந்ததைச் சொல்லியும் தரமாட்டான்.

“எனக்குத் தெரிந்ததை உனக்குச் சொல்லிக் கொடுத்தால்,  ஒருநாள் நீ என்னுடன் போட்டிப் போடுவாய். அதனால் நான் உனக்குச் சொல்லித்தர மாட்டேன் போ” என நேரடியாக மறுத்துவிடுவான்.

கட்டுரையாளர்: பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம்.

காலம் உருண்டோடின. வருடம் முப்பதைக் கடந்தது. இன்று அவன் என்ன செய்கிறான், எப்படி வாழ்கிறான் எனப் பார்த்தால் அவன் வாழ்வும் பார்க்கும் வேலையும் சொல்லும் படியாக இல்லை. குறுகிய நண்பர்கள் வட்டம். மிகவும் ஏழ்மையான நிலையிலேயே தன் வாழ்கையை ஓட்டுகின்றான். ஆனால் மதிப்பெண் வாங்குவதில் திறமையானவன். ஆக வெற்றிகரமான வாழ்விற்கு மதிப்பெண் தாண்டிய பல திறமைகளும் தேவைப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இன்னொரு சம்பவம். ஒரு பையனை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்து படிக்கவைத்தனர்.  நிறைய மதிப்பெண்கள் எடுத்தான்.  நல்ல வேலையிலும் சேர்த்து விட்டனர்.  வெளிநாட்டு வேலையும் கிடைத்தது, சென்று வந்தான். திருமணம் நல்ல இடத்தில் நடந்தது, ஆனால்  பையனின் இல்லற வாழ்க்கை சவாலானது.  இந்த நிலைக்குக் காரணம் வெளிப் பழக்க வழக்க அனுபவங்கள் இல்லாததுதான். கேட்டுப் பெறுவது மற்றும் விட்டுக் கொடுப்பதில் சிக்கல். இதனை நண்பர்களிடையே எளிதில் கற்றுக் கொள்ளலாம். இந்த பண்பு இல்லாததால் இணைந்து வாழ்க்கை நடத்துவதே கடினமாகிவிட்டது.  வாழ்கையைப் புரிந்து கொள்ள மற்றும் வாழ்வை ரசிக்க நண்பர்கள் வட்டம் மிகவும் முக்கியம் என்பது மறுக்க முடியாத உண்மை.

சராசரி மதிப்பெண்களே பெற்று வளர்ந்த நாடுகளாகிய அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஆராய்ச்சியாளர்களாகவும் பேராசிரியர்களாகவும் பணியாற்றும் பலரை நான் அறிவேன். சுமையறியாமல் இருக்க விரும்பி படித்தல் அவசியம். நல்ல வேலை கிடைக்க புரிந்து படித்தல் அவசியம். வாழ்கையில் வெற்றி பெற்ற மனிதர்களை புரிந்து கொள்ளுவது மிக அவசியம்.

நான் அமெரிக்கத் நாட்டில் பணியாற்றிய தருணம். அங்கு எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் அந்த பகுதியிலிருந்த அனைத்து இந்தியருக்கும் நண்பர். மாலை நேரங்களில் அவர் தொலைப்பேசி எப்போதும் இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும். யாருடனாவது பேசியபடியே இருப்பார். இந்த பகுதியில் உள்ள இந்தியச் சங்கத்தில் அவரின் பங்கு மகத்தானது.  எதிர்பாராதவிதமாக அவருக்கு வேலை இல்லாமல் போனது. அவரின் விசா சட்டப்படி  அவர் உடனடியாக இந்தியா திரும்ப வேண்டியதாயிற்று. சும்மா செல்லக்கூடாது. அவரை மீண்டும் அமெரிக்காவிற்குக் கொண்டுவர அந்த பகுதியில் உள்ள அனைத்து இந்தியர்களும் முயன்றனர். அதன் விளைவு அவர் அடுத்த சில மாதங்களில் அமெரிக்காவிற்கு வந்துசேர்ந்தார்.  அதுவும் அதே பகுதிக்கு வந்து சேர்ந்தார்! நண்பர்கள் வட்டம் அவ்வளவு சக்தி படைத்தது.  நல்ல நண்பர்கள் வட்டம் தவிர்க்க முடியாத ஒன்று. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது உணர வேண்டிய பழமொழி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.