தமிழகத்தில் 2026ல் பாமக ஆட்சிக்கு வரும்: அன்புமணி ராமதாஸ்

அரூர்: தமிழகத்தில் 2026ல் பாமக ஆட்சியை பிடிக்கும் என்றும், அதற்கு கட்சியினர் தயாராக வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தருமபுரி கிழக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகளுடனான கலந்துரையாடல் கூட்டம், மணியம்பாடி என்ற இடத்தில் நடந்தது. இதில் பாமக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று கட்சியினரை தனித்தனியாகச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

முன்னதாக நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகள் மத்தியில் பேசிய அவர், “இன்றைய அரசியல் களம் நமக்கு ஏற்றதாக மாறி இருக்கிறது. இதில் நாம் போகவில்லை என்றால் வேறு யாராவது நுழைந்து விடுவார்கள். தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் நமக்கு ஆதரவளிக்கும் மனநிலைக்கு மாறிவிட்டார்கள். ஆளும் இரண்டு கட்சிகளும் போதும் என்ற நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள். திமுக ஒரு முறை ஆட்சி வந்தால் திரும்ப வராது. மீண்டும் திமுகவை மக்கள் தோ்வு செய்ய மாட்டார்கள்.

தற்போது அதிமுக 4ஆக குழப்பத்தில் உள்ளது. எனவே வரவிருக்கும் தேர்தலில் இதற்கு அடுத்த தேர்வாக பாமக தான் உள்ளது. மொரப்பூர் ரயில் திட்டம், ஒகேனக்கல் குடிநீர் திட்டம் என தருமபுரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்காகவும் போராடும் கட்சியாக பாமக உள்ளது. தமிழகத்தில் சில கட்சிகள் ஊடக கட்சிகளாகவும், சில கட்சிகள் தேர்தல் கட்சிகளாகவும், சில கட்சிகள் விளம்பரக் கட்சிகளாகவும், சில கட்சிகள் பிரிவினையை உருவாக்கும் கட்சிகளாகவும் உள்ளன. பாமக மட்டுமே வளர்ச்சிக்கான கட்சி என மக்களால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. வரும் 2026-ல் பாமக ஆட்சிக்கு வரும். யாருமடைய தயவும் இனி நமக்கு தேவைப்படாத சூழல் உருவாகியுள்ளது. வருகின்ற எம்பி தோ்தல் செமிபைனல் போன்றது. சட்டமன்றத் தேர்தல் பைனல் போன்றது. இதில் நாம் வெற்றிபெற வேண்டும். நிர்வாகிகள் அதற்கு தயாராக வேண்டும்.” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.