2024 லோக்சபா தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது: முதல் 2 நாளில் பூஜ்ஜிய, கேள்வி நேரத்திற்கு அனுமதி இல்லை

புதுடெல்லி: வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் லோக்சபா ேதர்தலுக்கு முந்தைய முழு பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. முதல் 2 நாளில் பூஜ்ஜிய மற்றும் கேள்வி நேரத்திற்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நிகழ்ந்த மோதல் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து எதிர்கட்சிகள் குரல் எழுப்பியதால், முன்கூட்டியே நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நிறைவடைந்தது. இந்நிலையில் வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பொது பட்ஜெட் நாடாளுமன்ற கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரு அவைகளின் மத்திய மண்டபத்தில் உரையாற்றுவார். இரண்டாவது நாளான பிப். 1ம் தேதி நடப்பு 2022 – 2023 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். ெதாடர்ந்து பிப். 2ம் தேதி முதல் இரு அவைகளிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி  தெரிவிக்கும் தீர்மானம் குறித்த விவாதம் நடைபெறும். அதன்பிறகு பிரதமர் மோடி, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பதிலளிப்பார். தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் முதற்பகுதி பிப். 13ம் தேதியுடன் முடிவடையும். அதன்பின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும். அப்போது பல்வேறு அமைச்சகங்களுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம்  நடைபெற்று, பொது பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் இரண்டு நாட்களில் (ஜன. 31, பிப். 1) ஆகிய நாட்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், பூஜ்ஜிய நேரம் மற்றும் கேள்வி நேரம் இருக்காது என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சகம் தெரியப்படுத்தி உள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘வரும் 31ம் தேதியன்று இரு அவைகளிலும் ஜனாதிபதி திரிவுபதி முர்முவின் உரை இருக்கும். அடுத்த நாள் பிப்ரவரி 1ம் தேதி ெபாது பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். இந்த இரண்டு நாட்களிலும் அவையில் பூஜ்ஜிய நேரம், கேள்வி நேரம் இருக்காது. மாறாக பூஜ்ஜிய நேரத்தில் எழுப்பப்படும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர விஷயங்கள் யாவும் பிப். 2ம் தேதி முதல் உறுப்பினர்கள் கேட்கலாம்’ என்று அதிகாரிகள் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.