இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது 20 ஓவர் போட்டி லக்னோவில் நடைபெற்றது. டாஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பிட்ச் பேட்டிங் விளையாட கடினமாக இருந்ததால், அந்த அணி வீரர்கள் ரன்கள் எடுக்க மிகவும் சிரமப்பட்டனர். இதற்கிடையே விக்கெட்டுகளும் அடுத்தடுத்து விழுந்ததால், ஆமை வேகத்தில் ரன் எண்ணிக்கை உயர்ந்தது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்ததால், நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் மட்டுமே எடுத்தது. 99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஸ்கோருடன் இந்திய அணி சேஸிங்கை தொடங்கியது.
ஸ்கோர் மிகவும் குறைவாக இருப்பதால் இந்திய அணி எளிமையாக வெற்றி பெறும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் இந்திய அணி வீரர்களும் ரன் எடுக்க மிகவும் தடுமாறினர். இதனை நன்கு உணர்ந்து கொண்ட நியூசிலாந்து அணியின் கேப்டன் சாணட்டர், அதற்கேற்ப பந்துவீச்சாளர்களை துருப்புச் சீட்டாக பயன்படுத்த தொடங்கினார். அவரின் இந்த யுக்திக்கு இந்திய அணி வீரர்களும் விக்கெட்டை பறிகொடுத்தனர். 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்திருந்தாலும், எதிர்பார்த்தபடி ரன் எடுக்க முடியவில்லை.
கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அப்போது, முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணிக்கு, 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்டது. சூர்யகுமார் யாதவ் 5 பந்தை பவுண்டரிக்கு அடித்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இருப்பினும், மதில்பேல் பூனையாகவே இந்த போட்டியும் இருந்தது. ஒருவேளை இந்திய அணி தோற்றிருந்தால், தொடரை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும். இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பிப்ரவரி 1 ஆம் தேதி அகமதாப்பாத்தில் நடைபெறுகிறது.