அதானி குழுமங்களில் முதலீடு எல்ஐசி நிறுவனம் விளக்கம்

மும்பை: அதானி குழுமங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் தொடர்பாக, எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தையில் எந்தெந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது என்ற விவரம் வழக்கமாக வெளியிடப்படுவது கிடையாது. ஆனால், எல்ஐசி நிறுவனம் அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது தொடர்பாக, சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக, அதானி நிறுவனத்தில் எல்ஐசியின்  முதலீடு குறித்து இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிப்படி, ரூ.35,917.31 கோடி மதிப்பிலான அதானி குழும நிறுவனங்களின் கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகள் எல்ஐசி நிறுவனம் வசம் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொண்ட முதலீடுகள் மூலம், அதானி குழும நிறுவனங்களில் ரூ.30,127 கோடிக்கு பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. கடந்த 27ம் தேதி நிலவரப்படி இவற்றின் சந்தை மதிப்பு ரூ.56,142 கோடியாக உள்ளது.  மேலும், இதுவரை அதானி குழுமங்களில் எல்ஐசி மேற்கொண்ட முதலீடு ரூ.36,474.78 கோடியாகும். பல்வேறு காலக்கட்டங்களில் இந்த முதலீடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

இதுமட்டுமின்றி, எல்ஐசி நிறுவனம் முதலீடு மேற்கொண்ட அதானி கடன் பத்திரங்கள் அனைத்தும், காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின், பாதுகாப்பானது என்பதை குறிக்கும் ஏஏ மற்றும் அதற்கு மேலான தரச்சான்று பெற்றவை. கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிப்படி, எல்ஐசியின் சொத்து மதிப்பு ரூ.41.66 லட்சம் கோடி. இதில், அதானி குழுமங்களில் எல்ஐசி மேற்கொண்டுள்ள முதலீடு வெறும் 0.975 சதவீதம் மட்டுமே. 66 ஆண்டுகள் பழமையான எல்ஐசி நிறுவனம், அனைத்து விதிகள், வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றியே முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், சந்தை மதிப்புகள் திடீரென மாற்றங்களுக்கு உட்பட்டவை என்பதையும் இங்கே குறிப்பிடப்பட வேண்டியது முக்கியமானதாகும்.  இவ்வாறு எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.