திருப்பூர்: இரு பிரிவு மோதல் விவகாரம்; வடமாநில இளைஞர்களைக் கைதுசெய்த போலீஸ்!

திருப்பூர், அனுப்பர்பாளையம் திலகர் நகரில் செயல்பட்டு வரும் பின்னலாடை நிறுவனத்தில் தமிழகத் தொழிலாளர்கள், வடமாநிலத் தொழிலாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி சிகரெட் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்னையில், வடமாநிலத்தவரை தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில், ஆத்திரமடைந்த வடமாநிலத்தவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இணைந்து, கற்கள் மற்றும் கட்டைகளால் தமிழகத் தொழிலாளர்களை தாக்கியிருக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருப்பூரில் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்த முயற்சிகள் நடந்தன.

தாக்குதல்

இதற்கிடையே திருப்பூர் மாநகர போலீஸார், தமிழகத் தொழிலாளர்களை வடமாநிலத்தவர்கள் தாக்கியதாக சமூக வலைதளங்களில் உண்மைக்குப் புறம்பாக தகவல்கள் பகிரப்பட்டதாகவும், வீடியோவை தவறாக சித்திரித்து வெளியிட்டிருப்பதாகவும் விளக்கமளித்தனர். மேலும், அந்த வீடியோவைப் பகிர்ந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட பனியன் நிறுவன மேலாளர் 15 வேலம்பாளையம் போலீஸில் புகார் அளித்தார். அதில், “கடையில் நடந்த பிரச்னை தொடர்பாக நிறுவனத்தில் இருதரப்பினர் இடையே மோதல் நடைபெற்றது.

கைது

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டது பனியன் நிறுவனத்தில் டெய்லராகப் பணிபுரிந்து வந்த பீகாரைச் சேர்ந்த ரஜட்குமார், பரேஷ்ராம் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, பொது இடத்தில் அவதூறாகப் பேசி பிரச்னை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்த போலீஸார், இருவரையும் கைதுசெய்தனர். இந்த மோதலில் தொடர்புடைய தமிழகத்தைச் சேர்ந்தவர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.