மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி:கடலூர் ஏ.சி.சி. அணி சாம்பியன்

கடலூர்

கடலூர்,

கடலூர் மாவட்ட கிரிக்கெட் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்த போட்டியில் கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவு பெற்ற கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடியது.

நாக்அவுட் முறைப்படி நடந்த இந்த போட்டியில் இறுதிப்போட்டிக்கு கடலூர் ஆனைக்குப்பம் ஏ.சி.சி. அணியும், கடலூர் காஸ்மோபாலிட்டன் பி அணியும் தகுதி பெற்றன. நேற்று காலை இறுதிப்போட்டி 25 ஓவர்கள் அடிப்படையில் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

ஏ.சி.சி. அணி வெற்றி

முதலில் டாஸ் வென்ற கடலூர் காஸ்மோபாலிட்டன் அணியின் கேப்டன் பாபு முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களம் இறங்கிய அந்த அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 22 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்த, அந்த அணி 79 ரன்களுக்குள் ஏ.சி.சி. அணி பந்து வீச்சாளர்களிடம் சரண் அடைந்தது. இருப்பினும் காஸ்மோபாலிட்டன் அணி பேட்ஸ்மேன்கள் கவியரசன் 25 ரன்கள் (32 பந்து), பாபு 17 ரன்கள் (13) பந்து எடுத்தனர். ஏ.சி.சி. அணி பந்து வீச்சாளர்கள் ராஜ்குமார் 3 விக்கெட், சிவா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்கோரை கட்டுப்படுத்தினர்.

தொடர்ந்து 80 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஏ.சி.சி. அணி ஆடியது. அந்த அணியிலும் விக்கெட்டுகள் விழுந்தாலும், அந்த அணி வீரர் சஞ்சய் 30 ரன்கள் (22 பந்துகள்) எடுத்து அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தார். 7 விக்கெட்டுகள் விழுந்தாலும் மிடில் ஆர்டரில் இறங்கிய மகேந்திரன் 18 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் அணியை வெற்றி பெற செய்தார். ஏ.சி.சி. அணி 15 ஓவர்களில் 80 ரன்களை எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. இதில் காஸ்மோபாலிட்டன் அணி பந்து வீச்சாளர்கள் பாபு 3 விக்கெட், நிதிஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

சுழற்கோப்பை பரிசு

இதையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் வெங்கடேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கலந்து கொண்டு போட்டியில் முதலிடம் பிடித்த ஏ.சி.சி. அணிக்கு சுழற்கோப்பை மற்றும் பதக்கம் பரிசாக வழங்கினார். 2-வது இடம் பிடித்த காஸ்மோபாலிட்டன் அணிக்கும் சுழற்கோப்பை, பதக்கம் வழங்கப் பட்டது.

ஆட்டநாயகன் விருது ஏ.சி.சி. அணி ஆல்ரவுண்டர் ரஞ்சித்குமாருக்கும் (132 ரன்கள் 9 விக்கெட்), சிறந்த பேட்ஸ் மேன் ஏ.சி.சி. அணி மகேந்திரன் (145 ரன்கள்), சிறந்த பந்து வீச்சாளர் காஸ்மோபாலிட்டன் அணி வீரர் பாபு (16 விக்கெட்) ஆகியோருக்கும் பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் விருத்தாசலம் யங்ஸ்டார் கிரிக்கெட் கிளப் செயலாளர் ராஜேந்திரன், ஏ.சி.சி. கிளப் நிறுவனர் சிதம்பரம், கிரிக்கெட் அகாடமி தலைவர் கார்த்திகேயன் உள்பட பயிற்சியாளர்கள், வீரர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கூத்தரசன் செய்திருந்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.