ஷாருக்கானை பதான் என அழைத்து ‘ஹே ராம்’ படத்திலேயே கணித்த கமல்ஹாசன்

‘பதான்’ படம் பாக்ஸ் ஆபிஸீல் தாறுமாறான வெற்றி அடைந்து வரும் நிலையில், 20 வருடங்களுக்கு முன்னரே உலக நாயகன் கமல்ஹாசன் ‘ஹே ராம்’ படத்திலேயே, ஷாருக்கானை பதான் என அழைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் கடந்த 25-ம் தேதி வெளியானது. சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு ஷாருக்கானின் ‘பதான்’ படம் வெளியானதால் எழுந்த எதிர்பார்ப்புகளையும் மீறி, கடந்த 5 நாட்களில் 542 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்துள்ளது ‘பதான்’. ‘பாகுபலி 2’, ‘கே.ஜி.எஃப். 2’ படங்களின் சாதனைகளையெல்லாம் அசால்ட்டாக கடந்து வரும் நிலையில், இந்தப் படத்தின் பெயருக்கும், கமல்ஹாசனுக்கும் உள்ள தொடர்பை குறித்து அறியலாம்.

தமிழ் சினிமாவில் எப்போதும் தொழில்நுட்ப விஷயங்களிலும் சரி, நடிப்பு சார்ந்த விஷயத்திலும் சரி பரீட்சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்பவர் கமல்ஹாசன். அந்தவகையில் கடந்த 2000-ம் ஆண்டு ‘ஹே ராம்’ என்றப் படத்தை நடிகர் கமல்ஹாசன், எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்தும் இருந்தார். இந்தப் படத்தில் சாக்கேத் ராம் என்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசனும், அவரது நண்பராக அம்ஜத் அலி கான் கதாபாத்திரத்தில் ஷாருக்கானும் நடித்திருந்தனர்.

image

கமல்ஹாசனின் மீது கொண்ட மதிப்பால் ஷாருக்கான் இந்தப் படத்தில் நடித்திருந்தார். ‘ஹே ராம்’ படத்தில் அகழ்வாராய்ச்சியாளர்களாக நடித்திருந்த இவர்கள் இருவரும், 1940-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் நடத்தப்படும் அகழ்வாராய்ச்சியின்போது, ஷாருக்கானை பார்த்து கமல்ஹாசன், ‘சரி பதான்… உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துங்கள்’ என்று கூறுவார்.

2000-ம் ஆண்டில் வந்த அந்தப் படத்தில் கமல்ஹாசன் அவ்வாறு கூறியிருந்தநிலையில், தற்போது 2023 ஆண்டில் வெளிவந்த ஷாருக்கான் படத்திற்கு ‘பதான்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது இரு படத்திற்கும் உள்ள தொடர்பை (தீர்க்கதரிசி) காட்டுவதுபோல் உள்ளது. மேலும், கமல்ஹாசன், கடந்த சில தினங்களுக்கு முன்னர், ‘பதான்’ வெற்றி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டும்போது கூட, “ ‘பதான்’ படம் குறித்து நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பதானை, சாகேத் வாழ்த்துகிறார். இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் சகோதரா” என்று குறிப்பிட்டு இருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.