அதிமுக வேட்பாளர் என்னாச்சு… ஈரோடு கிழக்கில் ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு என்ன சிக்கல்?

அதிமுகவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அக்கட்சி காணாத நிகழ்வுகள் எல்லாம் மாறி மாறி அரங்கேறி ரத்தத்தின் ரத்தங்களை கவலையில் ஆழ்த்தி வருகின்றன. ஒற்றை தலைமைக்கான அதிகாரப் போட்டி உச்ச நீதிமன்ற வழக்கின் தீர்ப்பில் சைலண்டாக உறங்கி கொண்டிருக்கிறது. அதற்குள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வந்து பரபரப்பை பற்ற வைத்துவிட்டது. ஒருபக்கம் இரட்டை இலை சின்னம் பெற நீதிமன்றத்தில் முறையீடு, மறுபக்கம் வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி.

தேர்தல் ஆணையம் முடிவு

ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை. இன்னும் கால அவகாசம் இருக்கிறது. நிதானமாக வேட்பாளரை அறிவிப்போம். இரட்டை இலை கடைசி நேரத்தில் கிடைத்தால் கூட போதும் என்றெல்லாம் அதிமுக தரப்பு சாக்கு போக்கு சொல்லி கொண்டிருக்கிறது. இருப்பினும் அக்கட்சியின் ஊசலாட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் கண்கூடாக பார்த்து வருகின்றனர். சின்னம் தொடர்பான விஷயம் தேர்தல் ஆணையத்தின் கைகளில் இருக்கிறது. எனவே அதற்காக உரிய சட்ட வழிமுறைகளின் படி செயல்பட வேண்டும்.

காங்கிரஸ் வேட்பாளர்

ஆனால் வேட்பாளர் விஷயம்
எடப்பாடி பழனிசாமி
,
ஓ.பன்னீர்செல்வம்
ஆகிய இருவரின் கைகளில் தானே இருக்கிறது. அப்புறம் ஏன் தாமதம் ஏற்படுகிறது. திமுக கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை முன்னிறுத்தி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் மும்முரம் காட்டி வருகின்றனர். இவர் ஏற்கனவே ஈரோடு மக்களுக்கு நன்கு பரீட்சையமானவர் என்பதால் பெரிதாக விளம்பரம் தேவையில்லை. அவரது மகன் திருமகன் ஈவேரா முன்னெடுத்த விஷயங்களை, கொண்டு வந்த நலத்திட்டங்களை சொல்லியும்,

பிரச்சார களம்

திமுக அரசின் மக்கள் நலப் பணிகளை எடுத்துரைத்தும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். ஆனால் அதிமுகவில் அப்படியான பிரபல முகம் ஓரிரு நபர்கள் இருந்தாலும் ஈவிகேஸ் இளங்கோவனுக்கு இணையாக சொல்லிவிட முடியாது. எனவே இடைத்தேர்தல் பிரச்சார களத்தில் அதிமுக வேட்பாளரை முன்வைத்து மிகத் தீவிர பிரச்சாரம் தேவைப்படுகிறது. பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு என்பதால் கிட்டதட்ட 25 நாட்கள் பிரச்சாரம் செய்யலாம். இவ்வாறு அதிக கால அவகாசம் இருக்கிறது என சிறிதும் அலட்சியமாகவோ, தாமதமாகவோ இருந்துவிட முடியாது.

அதிமுகவில் சிக்கல்

ஏனெனில் எதிராக களமிறங்கும் வேட்பாளரின் செல்வாக்கு, அரசியல் பலம் போன்ற விஷயங்களையும், ஆளுங்கட்சி யார் என்பதையும் கவனித்து காய்களை நகர்த்த வேண்டும். அப்படி பார்த்தால் இந்நேரம் வேட்பாளர் அறிவிப்புகள் வெளியாகி கட் அவுட்கள், போஸ்டர்கள், சமூக வலைதளங்ளில் அவரது முகம் தீயாய் பரவியிருக்க வேண்டாமா? என்ற கேள்வி அதிமுகவை நோக்கி ஒரு சாமானியராக எழத் தான் செய்கிறது.

வேட்பாளர் பிரச்சினை

இதுபற்றி விசாரிக்கையில், செலவு செய்யக்கூடிய வேட்பாளர்கள் கூட போட்டியிட தயங்குகிறார்களாம். எடப்பாடி முகாமில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் நந்தகுமார், முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு உள்ளிட்டோரின் பெயர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் செலவு விஷயத்தில் தயங்குவதால் எடப்பாடியே செலவு செய்ய முன்வந்தாராம். கடைசியில் கட்சி சார்பில் செலவு செய்யலாம் என முடிவு செய்துள்ளனர்.

எடப்பாடி உத்தரவு

இதையடுத்து எத்தனை பூத்கள் இருக்கின்றன, ஒவ்வொரு பூத்திலும் எத்தனை பேர் பணியாற்றுவர், நேரடி பிரச்சாரம், போஸ்டர்கள், சமூக வலைதளங்களில் பிரச்சாரம் உள்ளிட்டவற்றிற்கு எவ்வளவு செலவாகும் என தனித்தனியே லிஸ்ட் போட்டு தரச் சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது. இதேநிலை தான் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் நிலவி வருகிறது. பிரச்சினை சற்றே ஓய்ந்திருப்பதால் விரைவில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.