அபுதாபி டூ மும்பை வந்த விமானத்தில் இத்தாலி பெண் பயணி போதையில் ரகளை: ஊழியர்கள் மீது எச்சில் துப்பியதால் பரபரப்பு

மும்பை: மும்பை வந்த விமானத்தில் போதையில் இருந்த இத்தாலி பெண் பயணி ஒருவர், விமான ஊழியர்கள் மீது எச்சில் துப்பியதால் அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அபுதாபியில் இருந்து மும்பைக்கு வந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் (யுகே 256), 45 வயதான இத்தாலி நாட்டை சேர்ந்த பெண் பயணி பயோலா பெருசியோ என்பவர் போதையில் பயணித்தார். அவர் திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று, பிசினஸ் கிளாஸ் இருக்கையில் அமர முயற்சித்தார். அவரை விமான ஊழியர்கள் தடுத்தனர். ஆவேசமடைந்த பயோலா பெருசியோ, தன்னை தடுத்த பெண் ஊழியர்களை திட்டினார்.

பின்னர் அவர்களை தள்ளிவிட்டார். ஒரு பெண் ஊழியரின் முகத்தில் குத்தினார். மற்றொரு பெண் ஊழியரின் மீது எச்சில் துப்பினார். ஒருகட்டத்தில் தனது ஆடைகளை களைந்து விமானத்தில் நடந்து சென்றார். அதிர்ச்சியடைந்த சக பயணிகள், வேறு வழியின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். தொடர்ந்து பெண் ஊழியர்களை திட்டிக் கொண்டே இருந்த பயோலா பெருசியோ, ஒருகட்டத்தில் தனது இருக்கையில் அமர மறுத்தார். அதையடுத்து 5 விமான ஊழியர்கள் ஒன்று சேர்ந்து பிடித்து, அவரை அவரது இருக்கையில் கட்டி வைத்தனர். விமானம் மும்பை வந்து தரையிறங்கியதும், பயோலா பெருசியோவின் பாஸ்போர்ட்டை ேபாலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவரை கைது செய்து, அந்தேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால், அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதால் உடனடியாக விடுவிக்கப்பட்டார். இதுகுறித்து போலீஸ் டி.சி.பி தீட்சித் கெடம் கூறுகையில், ‘விமான ஊழியர் எல்.எஸ்.கான் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில்  பயோலா பெருசியோ கைது செய்யப்பட்டார். தற்போது அவரை நீதிமன்றம் விடுவித்துள்ளது. அவர் மதுபோதையில் இருந்ததற்கான சான்றுகள் பெறப்பட்டு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும். விமான ஊழியர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், தொழில்நுட்ப ஆதாரங்கள், விமானத்தின் மருத்துவ குழுவின் அறிக்கைகளின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.