ஈரோடு இடைத்தேர்தல்; முதல் நாள் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஆர்வம் காட்டிய சுயேட்சைகள்

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலுக்கான முதல் நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. 5 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அதற்கு பிப்ரவரி 27-ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் விரைவில் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் நாள் வேட்புமனு தாக்கலில், சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வம் காட்டினர். பிற்பகல் 3 மணியளவில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. மொத்தம் 10 சுயேட்சை வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய முன்வந்தனர்.

ஆனால் பத்மராஜன், நூர்முகமது, ரமேஷ், தனலட்சுமி, அருள்ராம் ஆகிய 5 பேரின் மனுக்களை மட்டுமே தேர்தல் அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர். மற்றவர்களின் வேட்புமனுவில் திருத்தம் இருந்தால், அவற்றை சரி செய்வதற்காக திருப்பி அனுப்பப்பட்டனர். இன்றைய வேட்புமனு தாக்கலில், பத்மராஜன் மற்றும் மனிதன் ஆகியோர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.

தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் பத்மராஜன், 233-வது முறையாக, இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இதுவரை இவர் கூட்டுறவு சங்க தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த மனிதன் (55) என்பவர் பின்னோக்கி நடந்து வந்து வினோத முறையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவருக்கு முன்மொழிய 10 பேர் இல்லாத காரணத்தால் அவரது மனுவை பெற தேர்தல் அலுவலர்கள் மறுத்துவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.