ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவது இதற்கு தானா? அவரே சொன்ன காரணம்!

2021 சட்டமன்றத் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நிறுத்தப்பட்ட ஈ.வெ.ரா திருமகன் வெற்றி பெற்றார். எதிர்பாராதவிதமாக அவர் உயிரிழந்த நிலையில் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் அந்த கூட்டணியில்
காங்கிரஸ்
மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்தது. காங்கிரஸ் சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே கூட்டணியில் இடம்பெற்றவர்கள் தற்போது மீண்டும் ஆதரவளிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் புதிய கட்சிகளும் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளன.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளிப்பதாக கூறியுள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “அண்ணாமலைக்கு எல்லாம் பதில் சொல்லுவது இப்பொழுது சரியாக இருக்காது. என்னைப் பொறுத்தவரை மக்களை சந்தித்து ஈரோட்டிற்கு நல்ல காரியங்களை செய்வதற்கு வாய்ப்பினைத் தாருங்கள் என்றும், என் மகன் விட்டுச்சென்ற பணியை தொடர்ந்து மேற்கொள்வதற்கு ஆதரவளித்து வாக்களியுங்கள் என்பதையும் வைத்துத்தான் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். நான் திருவண்ணாமலைக்கு போக விரும்பவில்லை. அண்ணாமலைக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை.

சீமான் மிக நல்ல நண்பர். ஆனால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கொள்கைகளை சொல்கிறார். ஆரம்பக்காலத்தில் பெரியாரை புகழ்ந்தார். இப்பொழுது கடுமையாக விமர்சனம் செய்கிறார். நான் வேட்பாளராக ஒப்புக்கொண்டதன் காரணம் நான் பிறந்த ஈரோட்டிற்கு நல்ல காரியங்களை செய்ய வேண்டும். பெரியார் ஈரோட்டின் நகர்மன்றத் தலைவராக இருந்து பல காரியங்களை செய்துள்ளார். என் தந்தை 1957-ல் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று பல நற்காரியங்களை செய்துள்ளார். என் மகனும் இந்த ஒன்றரை ஆண்டுக்காலத்தில் பல நற்காரியங்களை செய்துள்ளார். சில தினங்களுக்கு பிறகு என் மகன் செய்த பணிகளின் பட்டியலை விநியோகிக்க இருக்கிறோம்.

பாராளுமன்றத்தில் இருந்தவர் இடைத்தேர்தலில் நிற்கின்றார் என என்னைப் பார்த்து சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை கலெக்டரால் செய்ய முடியாத ஒன்றை ஒரு பியூனால் செய்ய முடியும். கலெக்டராக இருந்தால் மேஜையில் பேனாவினை வைத்துக்கொண்டு மக்களுக்கு சேவை செய்ய முடியும். பியூனாக இருந்தால் மக்களோடு ஒருவராக இருந்து சேவை செய்ய முடியும். எனக்கு இரண்டும் ஒன்றுதான்” எனக் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.