களஆய்வில் முதலமைச்சர் திட்டம் துவக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வேலூர் பயணம்: வேலூர் மற்றும் காட்பாடி சுற்றுவட்டாரத்தில் டிரோன்கள் பறக்க தடை

வேலூர்: களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வேலூர் செல்கிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘களஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை வேலூரில் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மதியம் 12.20 மணியளவில் காட்பாடி வருகிறார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வருகிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல்வர், அங்கு மாநிலம் முழுவதும் அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கான கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசுகிறார்.

இந்நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு காந்தி நகர் தனியார் ஓட்டலில் சிறிதுநேரம் ஓய்வெடுக்கிறார். அதன்பிறகு முதல்வர் அன்று மாலை வேலூர் விஐடி செல்கிறார். அங்கு முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி மாணவர் விடுதி மற்றும் பேர்ல் ஆராய்ச்சி கட்டிடத்தை திறந்து வைத்து பேசுகிறார். இதைத்தொடர்ந்து தோல் தொழிலதிபர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் குழுக்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். மறுநாள் காலை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட 4 மாவட்ட கலெக்டர்களுடன் அரசின் திட்டங்களின் நிலை குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொள்கிறார். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் காவல்துறை உயர்அதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்த கூட்டம் நடக்கிறது.

இதில் ஐஜி கண்ணன், டிஐஜி முத்துசாமி, எஸ்பிக்கள் வேலூர் ராஜேஷ்கண்ணன், ராணிப்பேட்டை தீபாசத்யன், திருப்பத்தூர் பாலகிருஷ்ணன், திருவண்ணாலை கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதையடுத்து இரவு வேலூரில் தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் கலெக்டர் அலுவலகத்தில் வேலூர் உட்பட நான்கு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அமைச்சர்கள், துறை செயலாளர்கள், துறைசார்ந்த மாவட்ட அலுவலர்கள் ஆகியோருடன் அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்து கலந்தாய்வு மேற்கொள்கிறார். இதற்கிடையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் திருமண நாளை முன்னிட்டு அவரது வீட்டுக்கு சென்று நேரில் வாழ்த்து தெரிவிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூர் வருகையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.