பட்ஜெட் 2023: பொருளாதார ஆய்வறிக்கையில் அப்படி என்னதான் இருக்கும்? – ஒரு பார்வை!

2023ம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றுகிறார். பின்னர் நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை (பிப்ரவரி 1) மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
நாட்டின் பொருளாதார நிலவரத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கும் பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த அறிக்கையின் முக்கியத்துவம் குறித்து தற்போது பார்க்கலாம்.
Budget 2023: What is Economic Survey, why is it important and where to  watch it
அடுத்து வரும் நிதியாண்டில் என்னென்ன செய்யப் போகிறோம், எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு, வளர்ச்சித் திட்டங்கள் என்ன என அரசு கூறுவதே பட்ஜெட். ஆனால் பொருளாதார ஆய்வறிக்கை என்பது இதற்கு நேர் மாறானது. கடந்த ஆண்டுகளில் அரசு சொன்னவற்றில் எதெல்லாம் நடந்திருக்கிறது? அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? என ஆராய்ந்து பட்டியலிடுவதுதான் பொருளாதார ஆய்வறிக்கை. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி, பணவீக்க நிலவரம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும்.
மேலும் பல்வேறு தொழிற்துறைகளின் வளர்ச்சி நிலவரம் எவ்வாறு உள்ளது என்ற புள்ளிவிவரங்கள் இந்த அறிக்கையில் இருக்கும். ஆய்வறிக்கையின் கடைசி பகுதியாக இடம்பெறும் எதிர்காலம் குறித்த பார்வை என்ற பகுதியில் குறிப்பிடப்படும் தகவலின் அடிப்படையில்தான் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. அரசின் முன்னேற்றங்களையும் பின்னடைவுகளையும் புள்ளிவிவரங்களோடு பட்டியலிட்டு காட்டும் ஆவணம் என்பதால் பொருளாதார நிலவரத்தின் கண்ணாடியாகவே ஆய்வறிக்கை திகழ்கிறது.
Budget 2023: What Is Economic Survey And Why Is It Important?
இந்த கூட்டத்தொடரில் அதானி குழுமத்தின் மீதான முறைகேடு புகார், குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படம் உள்ளிட்டவை குறித்து பிரச்னை எழுப்ப காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கிடையே பட்ஜெட் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆலோசனை நடத்தினார்.
அப்போது அதானி குழுமத்தின் மீதான முறைகேடு புகார் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக, ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளன. கூட்டத் தொடரின்போது அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க தயாராக இருப்பதாகவும், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.