“ரெண்டு சிசேரியன், 108 கிலோ எடை இருந்தேன்!’’ – பாடிபில்டராக சாதிக்கும் மதுரை பெண் வெரோனிகா

“ `வாழ்க்கையில எந்த நொடி ஆச்சர்யங்கள சுமந்து வச்சுருக்கும்னு யாருக்கும் தெரியாது. அதுவரைக்கும் நாம காத்திருக்கிறோமாங்கிறது தான் ரொம்ப முக்கியம்’ – பத்து வருஷத்துக்கு முன்ன யாராச்சும் என்கிட்ட இப்படி சொல்லி இருந்தா, அதை நம்பிருப்பேனானு தெரியல. ஆனா எனக்கான ஆச்சர்யங்கள் எல்லாமே என்னோட 38 வயசுக்கு அப்புறம்தான் நடந்துச்சு, அதுக்கு நானே சாட்சி…” – நம்பிக்கையும் உற்சாகமும் நிறைந்து பேச தொடங்குகிறார் வெரோனிகா. மதுரையைச் சேர்ந்த பெண் பாடிபில்டர். 2022-ம் ஆண்டு ஆசிய அளவில் நடந்த பாடிபில்டர் போட்டியில் ஆறாம் இடத்தை பிடித்தவர்.

பாடிபில்டர் வெரோனிகா

யார் இந்த வெரோனிகா?!

’’நான், இந்த தலைமுறைக்கான ஆள் இல்ல. சுடிதார் போட்டாலே ஏற இறங்க பார்க்குற தலைமுறையில, பாவாடை சட்டை மட்டுமே போட்டு வாழ்ந்த சராசரி மதுரை பொண்ணு. பள்ளிக்கூடம், பள்ளிக்கூடம் விட்டா வீடுன்னு, அப்பா, அம்மா ரெண்டு தங்கச்சிகளோட ரொம்ப சாதாரண குடும்பம். படிக்கிற காலத்துல கூட ஸ்போர்ட்ஸ்ல விருப்பமோ, தேடுதலோ இருந்தது இல்ல. வீட்டுல மூணு பேருமே பொண்ணுங்க அப்படீங்கிறதால மதுரைய தாண்டி எங்கேயும் கூட போனது இல்ல.

இப்படிப்பட்ட சூழல்ல வளர்ந்த எனக்கு எல்லா பொண்ணுங்கள போலவே கல்யாணமும் நடந்தது. ரெண்டு குழந்தைகளையும் சிசேரியன் பண்ணிதான் எடுத்தாங்க. எல்லோருக்கும் இருக்குற பிரச்னை போலவே எனக்கும் உடல் எடை அதிகமாக ஆரம்பிச்சது. கொஞ்சம் கொஞ்சமா ஏறுன எடை 108 கிலோ வரைக்கும் போயிருச்சு. அதே நேரத்துல அப்பாவோட மரணம், குடும்ப வாழ்க்கையில சிக்கல்னு மனதளவுல இன்னமும் உடைஞ்சு போயிருந்தேன்.

மனசும் சரியில்லை, உடம்பும் சரியில்லைனா ஒரு விரக்தியும் வெறுப்பும் வாழ்க்கையில உண்டாகும் இல்லையா? அது எனக்கும் உண்டாச்சு. ஆனா இது மட்டுமே வாழ்க்கை இல்லையேன்னுதான் என்னோட 38வது வயசுல ஜிம்முல சேர முடிவு பண்ணுனேன். சுத்தி இருந்த சொந்தக்காரங்க எல்லாரும் கிண்டல் பண்ணினாங்க. ஆனா அது எதுவும் எனக்கு எதையும் கொண்டு வந்து சேர்க்கப் போறதும் இல்ல, என்கிட்ட இருந்து எதையும் எடுத்துட்டுப் போகப்போறதும் இல்லைங்கிற மனநிலையில தான் ஒர்க் அவுட் பண்ண ஆரம்பிச்சேன்.

எந்த எக்ஸ்ட்ரா மருந்துகளும் எடுத்துக்காம இயற்கையான உணவுப் பழக்கவழக்கத்திலேயே ஆறே மாசத்துல எடை குறைய ஆரம்பிச்சேன். அது எனக்கு ரொம்பவே தைரியத்தையும் நம்பிக்கையையும் குடுத்துச்சு. எடை குறைக்கத்தான் ஜிம்முக்கு போனேன். அதுவே ஒரு போதை மாதிரி ஆகி பாடிபில்டிங் பண்ணலாம்னு ஆசைய உண்டு பண்ணுச்சு. இப்படித்தான் ஆரம்பிச்சது என் பாடிபில்டர் பயணம்.’’

பாடிபில்டர் வெரோனிகா

ஆனாலும் நிறைய சவால்கள் இருந்துருக்கும் தானே?

’’நிச்சயமா. நான் சேலை கட்டி தலை நிறைய பூ வெச்சுக்கிற பொண்ணு. ஜிம்ல சேர்ந்த பிறகு இந்த சமூகத்தை எதிர்கொள்ள எனக்கு நிறைய தைரியம் தேவைப்பட்டுச்சு. முதல் ஸ்டேஜ் ஏறும்போது மொட்டையடிச்சுக்கிட்டேன். ஸ்லீவ்லெஸ்ல நிக்கிறதுக்கே எனக்கு அவ்வளவு கூச்சமா இருந்துச்சு. உடல் என்பது ஒரு போகப்பொருள் இல்லைன்னு எனக்குள்ள நான் உணர்ந்துக்கிறதுக்கே நிறைய அவகாசம் தேவைப்பட்டது. இது எல்லாத்தையும் மீறி நின்னதுக்கு காரணம் அவமானங்களும் கேலிகளும் தான். சொல்லப்போனா, ஒரு வகையில அந்த அவமானங்களும் கேலியும்தான் எனக்கு உந்துசக்தி.’’

மத்த விளையாட்டுகளைவிட பாடிபில்டிங்கை தேர்வு செய்ய பெண்கள் காட்டுற தயக்கம் குறைஞ்சிருக்கா?

’’பெண்கள் கல்யாணம் வரைக்கும் பெத்தவங்களுக்காகவும், கல்யாணத்துக்கு அப்புறம் குழந்தை மற்றும் கணவனுக்காகவும்னு வாழுறாங்க. தனக்குனு எதுவுமே இல்லாம, எதையுமே விரும்பாம தியாகம் பண்ணிடுறாங்க. இப்படியான சமூக சூழல்ல அவங்க இந்த பாடிபில்டிங்குக்கு வர்றது ரொம்ப சவாலான விஷயம். பாடிபில்டிங் விடுங்க, தன் உடல் ஆரோக்கியத்துக்காக நார்மல் உடற்பயிற்சிகள் செய்றதுக்காவது பெண்கள் முன்வரணும். கல்யாணத்துக்கு அப்புறம் உணவு, ஆரோக்கியம்னு எதுலயுமே பெருசா கவனம் எடுத்துக்க மாட்டேங்குறாங்க. அது மாறணும்.’’

பாடிபில்டர் வெரோனிகா

உங்களுக்கு கிடைச்ச குடும்ப ஆதரவு பத்தி?

’’சிங்கிள் மதரா, ரெண்டு குழந்தைகளை நான்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன். குடும்ப வன்முறையில் நான் அனுபவிச்ச வலிகள் எல்லாமே அவங்களுக்கு தெரியும். என்கிட்ட அவங்க சொன்னது, ’அம்மா உங்களுக்கு சந்தோஷம் தர்ற விஷயம் எதுனாலும் நீங்க பண்ணுங்க, நாங்க கூட இருப்போம்’ என்பதுதான். என் பையனும் பொண்ணும் இந்த பாடிபில்டிங்ல இருக்கணும்னு ஆசைப்படுறேன். ஆனா அவங்க கனவு என்னனு பொறுத்திருந்து பார்ப்போம்.’’

போட்டிகளுக்குத் தயாராகுறதுக்கான பொருட்செலவு எல்லாம்..?

’’என்னோட தினசரி வாழ்க்கைங்கிறது காலையில 5 மணிக்குத் தொடங்கிரும். பசங்கள ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, ஜிம்முக்கு டிரையினர் வேலைக்குப் போயிருவேன். சாயங்காலம் பெர்சனல் டிரைனராவும் சொல்லிக் கொடுத்துட்டு இருக்கேன். இதுல கிடைக்கிற வருமானத்தை வச்சுதான் போட்டிகளுக்கு என்னை தயார்படுத்திக்கிறேன். ஸ்பான்சர் வேண்டி போயி நின்னா, பொண்ணுக்கு இதெல்லாம் தேவையா, என்னத்த பண்ணிரும்னு காதுபடவே பேசுவாங்க. என்னா ஆனாலும் சரி இத விட்டுடக் கூடாதுன்னு இயங்கிட்டு இருக்கேன்.’’

பாடிபில்டர் வெரோனிகா

அடுத்து?

’’என் உடல் தான் எனக்கான ஆயுதம். அதை உணர்ந்ததனாலதான் இவ்வளவு தூரம் வர முடிஞ்சது. ஆர்வம் இருக்குற பெண்கள்கிட்ட பாடிபில்டிங்கை கொண்டுபோய் சேர்க்கணும், அவங்களை இங்க அழைச்சுட்டு வரணும். அதை செய்வேன்னு நம்புறேன்.’’

வாழ்த்துகள் வெரோனிகா!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.