அழகிரி எங்கே… ஈரோடு கிழக்கில் இளங்கோவனுக்கு வந்த புது சிக்கல்?

காங்கிரஸ்
என்றாலே கோஷ்டி பூசல் என்பது எழுதப்படாத விதியாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில் ஈவிகேஸ் இளங்கோவன்,
கே.எஸ்.அழகிரி
, தங்கபாலு உள்ளிட்டோரை சொல்லலாம். நாற்காலிகள் பறப்பது, உருட்டுக்கட்டைகள் பாய்வது, சட்டைகள் கிழிவது என காங்கிரஸ் கூட்டம் என்றாலே அதிரி புதிரி சம்பவங்களுக்கு பஞ்சமிருக்காது. ஒவ்வொரு கோஷ்டியும் கட்சி மேலிடத்தில் பல்வேறு விதங்களில் காய்களை நகர்த்தி வருகின்றனர். இந்த சூழலில் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகி தமிழ்நாடு அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர்

திமுக
கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஈரோட்டில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஈரோடு கிழக்கு சீட் யாருக்கு என்ற கேள்வி எழுந்த நிலையில், திமுக தலைமையிடம் கேட்காமலேயே தங்களுக்கு தான் சீட் என்று முதல் ஆளாய் சொன்னவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

திமுக தலைமை

அதன்பிறகு திமுக தலைமையை சந்தித்து பேசுகையில் செம டோஸ் வாங்கியதாக பேச்சு அடிபட்டது. பின்னர் ஈரோடு கிழக்கில் தேர்தல் பணிமனை திறப்பு, வீடு வீடாக சென்று பிரச்சாரம், வேட்பாளர் அறிமுக கூட்டம், கட்சியினர் ஆலோசனை என எந்த ஒரு விஷயத்திலும் கே.எஸ்.அழகிரியை காணவில்லை. பலம் வாய்ந்த திமுக இருக்கிறது. அவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து எப்படியாவது வெற்றி பெற வைத்துவிடுவர் என்ற நம்பிக்கை இருக்கலாம்.

கடலூருக்கு எஸ்கேப்

ஆனால் கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் தொகுதி பக்கமே எட்டி பார்க்கவில்லை என்றால் எப்படி? என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுப்பப்படுகிறது. கே.எஸ்.அழகிரி எங்கே என்று விசாரித்தால் சொந்த ஊரான கடலூருக்கு சென்று விட்டாராம். எல்லாம் கோஷ்டி மோதல் என்கிறார்கள். இருக்கட்டும். இதையெல்லாம் தேர்தல் நேரத்திலா வெளிக்காட்டுவது? கட்சிக்காக ஒன்றுபட்டு நிற்க வேண்டாமா?

கோஷ்டி மோதல்

இது எதிர்க்கட்சிகளின் கண்ணில் பட்டால் ஒரு அஸ்திரமாக கையிலெடுத்து பொறிந்து தள்ளிவிடுவார்களே? என்ற தொண்டர்கள் சில குமுறுகிறார்கள். அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி மோதலுக்கு இடையில் ஈவிகேஎஸ் இளங்கோவனை வீழ்த்தும் வகையில் சில உள்ளடி வேலைகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதனால் உஷாரான அவர், திமுகவை மட்டுமே பெரிதும் நம்பியிருப்பதாக தெரிகிறது.

வெற்றி உறுதி

திமுக அமைச்சர்கள் எஸ்.முத்துசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோருடன் அதிக நெருக்கம் காட்டி எப்படியாவது வெற்றி பெற விட வேண்டும் என்று விடா பிடியாக வேலை செய்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உறுதி என்றே சொல்கின்றனர். இருப்பினும் வாக்கு வித்தியாசத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

அடுத்து வரும் தேர்தல்

ஒருவேளை எதிர்பாராத முடிவுகள் வெளியாகி சொதப்பினால் அப்புறம் 2024 மக்களவை தேர்தலுக்கு சீட் கேட்பது சிக்கலாகிவிடும். காங்கிரஸ் வரும் போதே கேட்டை போட்டு திமுக கறார் விடும். இது 2026 சட்டமன்ற தேர்தலில் கூட கூட்டணி கணக்குகளை மாற வைக்கலாம் என்கின்றனர். எனவே மார்ச் 2ஆம் தேதியை (வாக்கு எண்ணிக்கை) அரசியல் பார்வையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.