கர்நாடகா | கங்காவதியில் ஜனார்த்தன ரெட்டி, பெல்லாரியில் அவரது மனைவி போட்டி: பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பு

பெங்களூரு: இந்த ஆண்டு நடைபெற இருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்காவதி தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியும், பெல்லாரி தொகுதியில் அவரது மனைவி அருணா லட்சுமியும் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால், மாநிலத்தில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான‌ காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்ட கல்யாண ராஜ்ஜிய பிரகதி கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜனார்த்தன ரெட்டி நேற்று (செவ்வாய்க்கிழமை) கொப்பலில் உள்ள கங்காவதியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

முன்னதாக ஜனார்த்தன ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியது: ” எங்களது கல்யாண ராஜ்ஜிய பிரகதி கட்சி ஆரம்பித்து ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், கட்சியை முடக்க சதி வேலைகள் நடந்து வருகிறன. பல ஆண்டுகளாக கட்சி நடத்தி ஆட்சியை ருசித்தவர்கள் எங்களை கண்டு அச்சம் அடைந்துள்ளனர். வருகிற தேர்தலில் எங்களது கல்யாண ராஜ்ஜிய பிரகதி கட்சி கர்நாடகாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நான் கொப்பலில் உள்ள கங்காவதி தொகுதியில் போட்டியிடுகிறேன். அதற்காகவே இங்கு வந்து பிரச்சாரத்தை தொடங்குகிறேன். எனது மனைவி அருணா லட்சுமியை பெல்லாரி நகர தொகுதியில் களமிறக்குகிறேன். தற்போது அந்த தொகுதியில் எனது சகோதரர் சோமசேகர ரெட்டி பாஜகவில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று இருந்தாலும், நான் அந்த தொகுதியில் என் மனைவியை களமிறக்குகிறேன்.

எனது சகோதரர்கள் (கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி), நெருங்கிய‌ நண்பர்கள் (ஸ்ரீராமுலு, ஆனந்த் சிங்) பாஜக எம்எல்ஏக்களாக இருந்தாலும் நான் எனது அரசியல் பயணத்தை உறுதியுடன் தொடருவேன். அவர்கள் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என நினைக்கிறார்களோ, அந்த திசையில் பயணிக்கட்டும். இந்த 3 மாதங்களில் எத்தனை தொகுதிக்கு செல்ல முடியுமோ, அத்தனை தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவேன். யாரையும் தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டேன்” என்றார்.

பாஜகவில் செல்வாக்காக உள்ள பெல்லாரி ரெட்டி சகோதரர்களில் மூத்தவரான ஜனார்த்தன ரெட்டியின் இந்த அறிவிப்பால் தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.