“கிடங்கில் கொட்ட அனுமதிக்காவிடில், குப்பைகளை எங்கு கொட்டுவோம்!" – தர்ணா செய்த தூய்மைப் பணியாளர்கள்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 24 வார்டுகள் இருக்கின்றன. இந்த வார்டுகளிலுள்ள குப்பைகளை காலை, மாலை என இருவேளையும் தூய்மைப் பணியாளர்கள் அப்புறப்படுத்தி, சுத்தம் செய்து வருகின்றனர்.

போராட்டம்

இந்த நிலையில், வீடுகளிலிருந்து பெறப்படும் குப்பைகளை நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் கொட்டவிடாமல் தடுப்பதாக நகராட்சி நிர்வாகம் மீது தூய்மைப் பணியாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாகப் பேசிய தூய்மைப் பணியாளர்கள், “எங்கள் பகுதிகளில் நாங்கள் வீடு, வீடாகச் சென்று சேகரிக்கும் குப்பைகளை நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டுவது வழக்கம். ஆனால், சமீபமாக நகராட்சி அதிகாரிகள் எங்களை அங்கு குப்பைகளைக் கொட்ட அனுமதிப்பதில்லை. அங்கு கொட்டவிடாமல் தடுத்தால், துர்நாற்றம் வீசும் அந்தக் குப்பைகளை நாங்கள் வேறு எங்கு அப்புறப்படுத்துவோம். மேலும், `தரம் பிரிக்கப்பட்ட மட்கா குப்பைகளை மட்டும் எடுத்து வாருங்கள். மட்கும் குப்பைகளை தெருமுனைகளில் கொட்டுங்கள்’ எனச் சொல்லும் அதிகாரிகள், மட்கா குப்பைகளை மறுசுழற்சி செய்து பணம் பார்க்கின்றனர்.

அதிகாரிகள் சொல்வதால் வேறு வழியில்லாமல், தெருமுனைகளில் குப்பைகளைக் கொட்டினால், மக்கள் எங்களிடம் சண்டைக்கு வருகிறார்கள். `உங்களால்தான் எங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல், நோய் வருகிறது. கொசு தொல்லையும் அதிகரித்திருக்கிறது’ என எங்களைக் கண்டாலே வாக்குவாதம் செய்கிறார்கள். இத்தகைய சூழலில், நாங்கள் என்னதான் செய்வோம்” எனக் குமுறினர்.

தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி நிர்வாகத்தையும், அதிகாரிகளையும் கண்டித்து நகராட்சி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம்

இது குறித்து தகவலறிந்து வந்த சீர்காழி போலீஸார் மற்றும் நகராட்சி ஆணையர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, நகராட்சி ஆணையர் குப்பைகளை கிடங்கில் கொட்டுவதற்கு அனுமதிப்பதாக உறுதி அளித்ததால், தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.