டெல்லி மேயர் தேர்தல்; 6ம் தேதி அழைப்பு விடுப்பு.!

டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 7ல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆம் ஆத்மி 134, பாஜக 104, காங்கிரஸ் 9, சுயேட்சைகள் 3 பேர் என வெற்றி பெற்றனர். முதல்முறை ஆம் ஆத்மி தனிப் பெரும்பான்மை பெற்று டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது. இதையடுத்து மேயர் யார் என்பதை தேர்வு செய்ய கடந்த ஜனவரி 6ஆம் தேதி மாநகராட்சி கூட்டம் கூடியது.

முதலில் உறுப்பினர்கள் பதவியேற்பு, அதன்பிறகு மேயர், துணை மேயர் தேர்வு, இறுதியாக 6 பேர் கொண்ட நிலைக்குழு ஆகியோரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. மேயர் தேர்வில் ஆம் ஆத்மிக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் இருந்த போதிலும், பாஜகவும் தன்னுடைய தரப்பில் வேட்பாளரை நிறுத்தி அதிர்ச்சியூட்டியது. இதனால் கடைசி நேர தில்லுமுல்லு நடைபெற்று மேயர் பதவியானது ஆம் ஆத்மிக்கு கை நழுவி போக வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.

இதுபற்றி ஆம் ஆத்மி கட்சி சார்பிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆம் ஆத்மி சார்பில் ஷெல்லி ஓபராய், அஷு தாகூர் ஆகியோர் மேயர் பதவிக்கு போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தரப்பில் ரேகா குப்தா மேயர் பதவிக்கான ரேஸில் களமிறக்கப்பட்டுள்ளார். துணை மேயருக்கான போட்டியில் ஆம் ஆத்மி சார்பில் ஆலே முகமது இக்பால் மற்றும் ஜலாஜ் குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக தரப்பில் கமல் பாக்ரி நிறுத்தப்பட்டுள்ளார். இந்த சூழலில் மாநகராட்சி கூட்டத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள், நியமன உறுப்பினர்கள் என இவர்களில் யார் முதலில் பதவியேற்பது என்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த விஷயத்தில் ஆம் ஆத்மி, பாஜக இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு வரை சென்றது. இதையடுத்து மேயரை தேர்வு செய்யாமலே கடந்த 6ஆம் தேதி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லி மாநகராட்சி கூட்டம் கடந்த ஜனவரி 24ம் தேதி மீண்டும் கூடியது. ஆனால் அன்றும் இரு கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளில் மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் முறையாக மேயர் தேர்தல் நடத்தக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

ம் ஆத்மியின் மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் மற்றும் கட்சித் தலைவர் முகேஷ் கோயல் ஆகியோர் தாக்கல் செய்த உச்ச நீதிமன்றத்தில் மனுவில், குறிப்பிட்ட காலவரையறைக்குள் டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டெல்லி மேயரை தேர்ந்தெடுக்க வருகிற 6ம் தேதி லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனா, டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் அமர்வுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேயரைத் தேர்ந்தெடுப்பதற்காக 250 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் ஒரு அமர்வை அழைக்க பிப்ரவரி 10 ஆம் தேதி முனிசிபல் கார்பரேஷன் கோரியது. பிப்ரவரி 3, 4 மற்றும் 6 ஆகிய மூன்று தேதிகளை கெஜ்ரிவால் அரசு பரிந்துரைத்த நிலையில், 6ம் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.