பாஜகவுக்கு விட்டுக்கொடுப்பேன் ஆனால் எடப்பாடிக்கு என்றால் ‘நோ’ சொல்லும் அதிமுக தலைவர்

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளராக செந்தில் முருகன் போட்டி ஓபிஎஸ் அறிவித்தார். பாஜக தேர்தலில் போட்டியிடுவதாக கூறி வேட்பாளரை அறிவித்தால் தங்களது வேட்பாளரை திரும்ப பெறுவோம் என்று கூறிய அவர், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு தான் காரணம் அல்ல என்றும், மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு வரவேற்பு அளித்தும் பேசினார். மேலும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தனக்கு பிடிக்கும் என்று கூறிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இன்று சென்னையில் அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்களைப் பேசினார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிட இருப்பதாக டெஹ்ரிவித்தார்.

கட்சியின் தீவிர விசுவாசியான செந்தில் முருகன், ஈரோடு கிழக்கு சட்டமன்ற வேட்பாளர் என்று சொன்ன ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்கள், ஓபிஎஸ் இபிஎஸ் என இரு தரப்பும் அதிமுக சார்பில் வேட்பாளர்களை அறிவித்தால் கட்சி சின்னமான இரட்டை இலை முடங்கக்கூடிய அபாயம் உள்ளதைப் பற்றி கேட்டனர். 

இரட்டை இலை முடக்கத்திற்கு தான் காரணம் அல்ல என தெரிவித்த அவர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டு வரை இருப்பதாகவும் இதுவரை கட்சியில் நடைபெற்ற பல்வேறு மட்ட தேர்தல்களில் இருவரும் சேர்ந்து கையெழுத்திட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி இருப்பதாக தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தரப்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு ஏ மற்றும் பி ஃபார்ம் ஆகியவற்றில் கையெழுத்திட தான் தயாராக இருப்பதாக கட்சி மேலாளர் இடம் தான் தெரிவித்ததாகவும் ஓபிஎஸ் குறிப்பிட்டார்.

கட்சி சின்னம் முடங்குவதற்கு தான் எந்த வகையிலும் காரணம் இல்லை எனவும், அது உங்களுக்கே தெரியும் என செய்தியாளர்களிடம் தெரிவித்த ஓ.பன்னீர் செல்வம், இரட்டை இலை சின்னம் கிடைக்காத பட்சத்தில் தனி சின்னத்துடன் போட்டியிடும் முடிவில் இருப்பதாகவும் கூறினார். 

கூட்டணி கட்சி மற்றும் தேசிய கட்சியாக இருக்கிற காரணத்தினால் பாஜக விடம் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் ஆதரவு கேட்டதாகவும், மேலும் அவர்கள் போட்டியிட விரும்புகிற பட்சத்தில் ஆதரவு தெரிவிப்போம் என கூறியதாக தெரிவித்தார். மேலும் வரும் நாட்களில் பாஜக தரப்பில் வேட்பாளரை அறிவித்தால் தங்களது வேட்பாளர்களை திரும்பப் பெற தயாராக இருப்பதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

தங்களது தரப்பு வேட்பாளர் பலமான வேட்பாளர் என்று கூறிய ஓபிஎஸ், கட்சி சின்னம் முடங்குவதற்கு தான் எந்த நிலையிலும் காரணமாக இருக்க மாட்டேன் என்றுஉறுதியளித்தார். உள்ளாட்சி மற்றும் தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் கட்சி தலைவர்கள் ஒற்றுமையுடன் செயல்படாத நிலைக்கு தான் காரணம் இல்லை என தெரிவித்தார்

மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டை வரவேற்பதாகவும் தெரிவித்த ஓபிஎஸ், தனது வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு சசிகலாவை சந்திக்க இருப்பதாகவும் மேலும் அவர்களை பிரச்சாரத்திற்கு அழைப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்தார்.

மெரினா கடற்கரையில் கலைஞருக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓ பன்னீர் செல்வம், இந்த கருத்தை உள்நோக்கி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், மக்கள் கருத்தே தனது கருத்து எனவும் தெரிவித்தார்.

மேலும், தற்போது ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய ஒரு கட்சி அக்கட்சி தலைவருக்கு நினைவு சின்னத்தை அமைக்கிறது, இது தவறு அல்ல என்று கூறிய அதிமுகவின் ஓபிஎஸ், மறைந்த திமுக தலைவர் கலைஞரை தனக்கும் பிடிக்கும் என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.