மதுரை எய்ம்ஸ் என்னாச்சு… பட்ஜெட்டில் ’ஜீரோ’ தான்- கொதிக்கும் தமிழ்நாடு எம்.பி.,க்கள்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை தென் தமிழ்நாடு மட்டுமின்றி கேரள மாநிலமும் பெரிதும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது. இதற்கான இடம் மதுரை தோப்பூரில் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பிறகு எந்தவித பணிகளும் தொடங்கப்படவில்லை. ஏனெனில் நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து தாமதம் செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அவ்வப்போது நினைவூட்டி வந்துள்ளார்.

மதுரையின் சாட்சி

அறிவிக்கப்பட்ட 8 மாதங்களில் உயர்ந்து நிற்கும் மதுரையின் கலைஞர் நினைவு நூலகம். அடிக்கல் நாட்டி 40 மாதங்களை கடந்தும் ஒற்றை செங்கலோடு நிற்கும் மதுரை எய்ம்ஸ். இரண்டும் மதுரையின் சாட்சிகள் என்று கடந்த ஆண்டு தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதில் மாதங்கள் தான் கடந்து செல்கின்றன. பணிகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கி பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு

இதனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் இப்படி? என்ற கேள்வி எழுந்தது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1,977 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 1,627 கோடி ரூபாயை ஜப்பானை சேர்ந்த ஜெய்க்கா நிறுவனம் வழங்கும் என ஒப்பந்தம் போடப்பட்டது. எஞ்சிய தொகை 350 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கும் என முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பு பதிலளித்திருந்தது.

உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

அதில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 2026 அக்டோபர் மாதம் வரை ஆகும். இந்த விஷயம் செலவினத்துறையின் பரிசீலனையில் உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் எம்.பி.பி.எஸ் படிப்பு ராமநாதபுரம் தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒற்றை செங்கலை எடுத்து வந்த உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தது பேசுபொருளாக மாறியது.

குடியரசு தலைவர் உரை

இது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளின் அவலநிலையை கட்டியதோடு, உதயநிதி அரசியலை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. நேற்றைய தினம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் போது குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அதில் 2014 முதல் 2022 வரை பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியில் 260 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்படியெனில் மதுரையில் எய்ம்ஸ் எங்கே என எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருந்தார்.

எம்.பிக்கள் போராட்டம்

இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்
2023-24ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதிலாவது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பட்ஜெட் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் செங்கலை ஏந்தி தமிழ்நாட்டு எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் எப்போது தான் விடிவு காலம் பிறக்குமோ என்று தமிழர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.