இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார்: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

புதுடெல்லி: தனது கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடர்ந்துள்ள வழக்கில், இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் என்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி மகேஷ்வரி தினேஷ் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த வாரம் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது. அதில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களது தரப்பில் தனியாக வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். ஆனால், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பக் கூடிய வேட்பாளரின் பெயரை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. எனவே, இந்த விண்ணப்பத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று முறையிடப்பட்டது.

ஜனவரி 30-ம் தேதியன்று, தனது கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த மனு தொடர்பான விவரங்களை ஓபிஎஸ் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் பகிர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டது. மேலும், மனு தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

தேர்தல் ஆணையம் கூறியது என்ன? – இந்த வழக்கில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை (பிப்.2) பதில் மனு தாக்கல் செய்தது. அதில், “ஒரு கட்சியின் விதிகளின்படி உட்கட்சி தேர்தல் உரிய கால இடைவெளியில் நடத்தப்பட்டதா என்பதைத்தான் தேர்தல் ஆணையம் பார்த்து உறுதி செய்யுமே தவிர, ஒரு கட்சியின் உள்விவகாரத்தையோ, உட்கட்சி தேர்லையோ கண்காணிக்காது.

அதிமுக கட்சி விவகாரத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதியன்று மாற்றம் செய்யப்பட்ட அடிப்படை விதிகளை தேர்தல் ஆணையம் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில், அந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. குறிப்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதேபோல, இந்த விவகாரத்தில் எந்த தரப்பினரும் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பான பிரச்சினையை எழுப்பவில்லை. எனவே, அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியின் வேட்பாளரின் வேட்புமனுவை ஏற்பது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிக்குத்தான் அதிகாரம் உள்ளது. எனவே, வேட்புமனுவை ஏற்பது தொடர்பாக சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி முடிவு செய்வார்.

மேலும், யார் கட்சியின் பொறுப்பாளராக இருப்பவர்களின் கையெழுத்து அங்கீகரிக்கப்படுவது என்பதுதான் விதி. அதன் அடிப்படையில் அதிமுகவின் பொறுப்பாளர் என்ற முறையில் ஆவணத்தில் இருக்கும் கையெழுத்து ஏற்கப்படும். இந்த விவகாரத்தில் இன்னும் விரிவான பதிலை உச்ச நீதிமன்றம் எதிர்பார்த்தால் அதனை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்யும்” என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்படிருந்த பதில் மனுவில், “பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது. மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து விவகாரங்களும் அடங்கியுள்ள நிலையில், இடைக்கால மனு என்பது விசாரணைக்கு உகந்தது அல்ல.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் காலாவதியாகிவிட்டது என்பதை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு மூலமே மேற்கண்ட பதவிகள் ரத்தாகிவிட்டதா, இல்லையா என்பது முடிவாகும். அதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் அதிகாரம் கேட்டு உரிமை கோர முடியாது. எனவே, அவர் தரப்பில், தற்போது தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அது பொதுக்குழு வழக்கின் தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.