எடப்பாடி எடுக்கும் துணிச்சல் முடிவு என்ன? இரட்டை இலை முடங்கினால் என்ன நடக்கும்?

தொண்டர்களின் ஆதரவு, மிகப் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு, முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளின் ஆதரவு என எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் டாப் கியரில் பறந்து கொண்டிருந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் பதில் மனு ‘சடன் பிரேக்’ போட வைத்துள்ளது.

இபிஎஸ் கேட்டது என்ன?“கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பக் கூடிய வேட்பாளரின் பெயரை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. எனவே, இந்த விண்ணப்பத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று தான் உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இரண்டு நாள்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் விசாரணையை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தது.
கை கழுவிய தேர்தல் ஆணையம்!உச்ச நீதிமன்றத்தில் ஆறு பக்கத்துக்கு தேர்தல் ஆணையம் பதில் மனு அளித்துள்ளது. இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரி இதுவரை யாரும் எங்களை அணுகவில்லை. இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார். தேர்தல் ஆணையம் ஒரு கட்சியின் செயல்பாடுகளை கண்காணிப்பதோ, முறைப்படுத்துவதோ, உள் விவகாரங்களில் தலையிடுவதோ இல்லை. வாக்காளர் பட்டியலை தயார் செய்வது, தேர்தலை கண்காணிப்பது ஆகியவையே தேர்தல் ஆணையத்தின் பணி” என்று தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்ன?அதாவது தேர்தல் ஆணையத்தில் தற்போதுள்ள ஆவணங்களின் அடிப்படையில் அதிமுகவின் தலைமையாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரே இருக்கிறார்கள். ஜூலை 11 பொதுக்குழு தொடர்பாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கும் நிலையில் அதை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.
தேர்தல் நடத்தும் அலுவலர் எப்படி முடிவெடுப்பார்?தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்கெனவே அவருக்கு அதிமுக குறித்து வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலேயே முடிவெடுப்பார். அதன் படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெழுத்திட்டுக் கொடுத்தால் தான் இரட்டை இலைக்கு அனுமதி கொடுக்க முடியும். இருவரும் தனித்தனியே இரட்டை இலை கேட்டு விண்ணப்பித்தால் இரட்டை இலை முடக்கப்படும்.
ஓபிஎஸ் செய்யும் அரசியல்!ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இரட்டை இலை வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டால் கையெழுத்து போட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறேன். அவர்கள் என்னிடம் கேட்டால் தருகிறேன் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார். இதன் மூலம் பந்தை லாவகமாக இபிஎஸ் பக்கம் தள்ளியுள்ளார்.
எடப்பாடியின் திட்டம் என்ன?எடப்பாடி பழனிசாமி தரப்போ இறங்கிச் சென்று ஓபிஎஸ்ஸிடம் கையெழுத்து கேட்காது. தனியாக இரட்டை இலைக்கு உரிமை கேட்க, சின்னம் முடக்கப்படும். சுயேச்சை சின்னத்தில் நின்றால்கூட கணிசமான வாக்குகளை பெற்றுவிடலாம் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் கணக்கு. சின்னம் முடங்கியதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான் என ஓபிஎஸ் தரப்பு கூறினாலும் அது தொண்டர்கள் மத்தியில் எடுபடாது என நம்புகிறார்கள்.
உச்ச நீதிமன்றத்தில் என்ன நடக்கும்?​​
தேர்தல் ஆணையமும், பன்னீர் செல்வமும் அளித்த பதில் மனு குறித்து வாத பிரதிவாதங்கள் நடைபெறும். அப்போது தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு குறித்து இன்னும் விரிவாக தெரியவரும். ஏனெனில் இன்று வெளியாகியுள்ள ஆறு பக்க பதில் மனுவில் தேர்தல் ஆணையம் வார்த்தைகளை மிக கவனமுடன் பயன்படுத்தியுள்ளது. அதன் உள் அர்த்தங்கள் குறித்து நாளை தெரியவரும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.