“கடந்த 9 ஆண்டுகளை போல், இந்த பட்ஜெட்டும் மக்களை ஏமாற்றுவதே; ஏனென்றால்…" – விளக்கும் சீமான்

மோடி அரசின் 2023 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சிக்கு உதவாத வழக்கம்போல மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையே என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்திய ஒன்றிய பா.ஜ.க அரசின் 2023-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் எவ்வித திட்டங்களும் இல்லாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. கடந்த 9 ஆண்டுக்கால மோடி ஆட்சியில் வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கைகளைப்போலவே இந்த நிதிநிலை அறிக்கையும் மக்களை ஏமாற்றும் அறிக்கையாகவே இருக்கிறது.

இந்திய பட்ஜெட் 2023

இந்திய நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்த நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தனி நபர்களுக்கான வருமான வரி வரம்பை உயர்த்தியது வரவேற்கக் கூடியது. ஆனால் புதிய வரி முறைக்கு மட்டுமே அது பொருந்தும் என்று அறிவித்திருப்பது, நடுத்தர மக்களை வஞ்சிக்கும் செயலாகும். புதிய வரிமுறை என்பது ஏழை, நடுத்தர மக்களுக்கு எவ்வித சலுகைகளும் இல்லாத வரிமுறையாகும். எனவே, வருமான வரி வரம்பு உயர்வு என்பது புதிய வரிமுறைக்குள் மாத சம்பளதாரர்களை தள்ளும் சூழ்ச்சியே.

அதுமட்டுமின்றி, இந்த புதிய வரிமுறை திணிப்பால் பணத்தைச் சேமிக்க வேண்டும் என்ற மக்களின் மனப்பான்மை குறைவதோடு, எல்.ஐ.சி (LIC) போன்ற நம்பகமான அரசு நிதி நிறுவனங்களில் மக்கள் முதலீடு செய்வதும் வெகுவாக குறையும். இதனால் நாட்டின் கட்டமைப்பு சார்ந்த முதலீடுகளில் பெரும் பின்னடைவு ஏற்படும். மேலும், இந்த நிதிநிலை அறிக்கையின்படி தனிநபர் வருமானவரி 9 லட்சம் கோடிகள் என்றும், பெருநிறுவன வருமான வரி வருவாய் 9.23 லட்சம் கோடிகள் என்றும் கணக்கிடப்பட்டிருக்கிறது.

சீமான்

இது, மாதத்திற்கு சில ஆயிரங்கள் வருமானம் ஈட்டும் கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்களையும், பல லட்சம் கோடிகள் லாபமீட்டும் ஒரு சில பன்னாட்டுக் கூட்டிணைவு பெருநிறுவனங்களையும் ஒரே தராசில் வைப்பதற்குச் சமமான செயலாகும். இந்தப் புதிய வரிவிதிப்பு முறை மிக மோசமான வரிவிதிப்பு முறை என்பதற்கு இதுவே சான்று.

அதுமட்டுமின்றி, தங்கம் என்பது பாமர மக்களால் சிறுக சிறுக சேர்க்கப்படும் முதலீடு. தற்போதைய நிதிநிலை அறிக்கையில் தங்கத்தின் மீதான சுங்க வரியை உயர்த்தியுள்ளது, ஏற்கெனவே உச்சத்திலிருக்கும் தங்கத்தின் விலையை மேலும் பன்மடங்கு அதிகரிக்கச் செய்யும் என்பதால், இனி தங்கம் வாங்குவது ஏழை மக்களுக்குப் பகற்கனவாகவே மாறிவிடும். அதோடு, கள்ளச்சந்தையில் பெருமளவில் தங்கக் கடத்தலுக்கும் வழிவகுக்கும்.

கைபேசி, மின்னணு இயந்திரங்களுக்கான சுங்கவரியைக் குறைத்துவிட்டு, எரிபொருள்களுக்கான வரிகளைக் குறைக்காமல் தவிர்த்திருப்பது, இந்த நிதிநிலை அறிக்கை ஏழை மக்களுக்கானதல்ல, முழுக்க முழுக்க பெருமுதலாளிகளுக்கானது என்பதற்கான மற்றுமொரு சான்று. ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் பொது விநியோக கடைகளில் இலவசம் தொடரும் என்று சொல்லிவிட்டு, உணவு மானியத்தை 31% விழுக்காடு குறைப்பது கோடிக்கணக்கான ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயல்.

சீமான்

விவசாயிகளுக்கு பல லட்சம் கோடிகள் கடன் கொடுப்போம் என்று வாக்குறுதியளிக்கும் இந்த நிதிநிலை அறிக்கை, அவர்களுக்கான உரமானியத்தை 22% குறைத்து விவசாயிகளை கடனாளியாக்கவும் வழி செய்கிறது. இத்தகைய ஒன்றுக்கொன்று முரணான அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கை மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது. மேலும், எரிபொருள் மீதான மானியத்தை 75% குறைத்துவிட்டதும், எரிகாற்று உருளை விலையை குறைக்காமல் விட்டுள்ளதும், உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தி, கடுமையான பஞ்சத்துக்கு வழிவகுக்கும்.

இந்திய ஒன்றிய அரசுக்கு, சொந்தமாக ஒரே ஒரு விமானம் கூட இல்லாத நிலையில் புதிதாக 54 விமான நிலையங்கள் கட்டப்படும் என்ற அறிவிப்பு வேடிக்கையானது. புதிய விமான நிலையம் கட்டி, அதனை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு, எதற்காக அரசே விமான நிலையங்களை கட்ட வேண்டும்? அதனையும் தனியார் நிறுவனங்களிடமே ஒப்படைக்கலாமே? தனியார் நிறுவனங்கள் கேட்டால் ஏழை மக்கள் தங்கள் நிலங்களை தரமாட்டார்கள் என்பதால், அவர்களை ஏமாற்ற இத்தகைய அறிவிப்புகளா? என்ற கேள்வியும் எழுகிறது.

சீமான்

மாநிலங்களுக்கான கடன் திட்டத்தை 50 ஆண்டுகள் நீட்டித்திருப்பது, வருவாய் பற்றாக்குறை அதிகமுள்ள வட மாநிலங்களுக்கு ஆதரவான நடவடிக்கையே. மேலும், வங்கிகள் முறைப்பாடு சட்டம் (Banking Regulation Act) மற்றும் செபி (SEBI) அமைப்பை வலுப்படுத்துவோம் என்றெல்லாம் கூறிவிட்டு, பல லட்சம் கோடிகள் பங்கு வர்த்தக மோசடிகளில் ஈடுபட்ட அதானி நிறுவனங்கள் மீது ஹிண்டன்பெர்க் நிறுவனம் வைத்த குற்றச்சாட்டுகளை புறம் தள்ளியது, மோடி அரசு உண்மையில் யாருக்காக செயல்படுகிறது என்பதை தெளிவாக்குகிறது. இது வரும் காலங்களில் நாடு சந்திக்கவிருக்கும் மிகப்பெரிய ஊழலை மூடி மறைக்கின்ற செயல்.

ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2023 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை என்பது வழக்கம்போல ஏழை மக்களை வஞ்சிக்கக்கூடிய, நாட்டின் முன்னற்றத்திற்கு துளியும் உதவாத வெற்று அறிக்கையே.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.