கோவை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கையிலும் வெற்றி! – கொண்டாட்டத்தில் அதிமுக-வினர்

தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டம், சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க ஆதரவு பெற்ற சுதா, அ.தி.மு.க ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு, மல்லிகா (சுயேச்சை) ஆகிய மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

சுதா

சுதா 2,553 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டு சௌந்திரவடிவு 2,554 வாக்குகளும், சுதா 2,551 வாக்குகளும் பெற்று 3 வாக்குகள் வித்தியாசத்தில் செளந்திரவடிவு வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டது.

இதை எதிர்த்து சுதா, கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம், சின்னதடாகம் ஊராட்சிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டது.

தேர்தல்

இதையடுத்து கடந்த 24ம் தேதி குருடம்பாளையம், அருணா நகர் சமுதாயக் கூடத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த நிலையில், கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி ராஜசேகர் முடிவுகளை இன்று அறிவித்தார். அதன்படி மொத்தம் பதிவான 5,357 வாக்குகளில் செளந்திரவடிவு 2,553 வாக்குகள், சுதா 2,551 வாக்குகள், மல்லிகா 65 வாக்குகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதிமுக-வினர் கொண்டாட்டம்

இதன் மூலம் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் செளந்தரவடிவு வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. வெற்றி மீண்டும் தக்க வைக்கப்பட்டிருப்பதை கோவை அ.தி.மு.க-வினர் கொண்டாடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.