சென்னை: `தங்கை இப்படி வாழ்வது அவமானமாக இருந்தது' – கொலை வழக்கில் கைதான அண்ணன் `பகீர்' தகவல்!

சென்னை, புழல் லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் சுதாசந்தர் (22). இவர் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார். இந்த நிலையில் சுதா சந்தரும் அவருக்குத் தெரிந்த இளம்பெண் ஒருவரும், கடந்த 31.1.2023-ம் தேதி பைக்கில் விநாயகபுரம் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது பைக்கை வழிமறித்து, ஆட்டோவிலிருந்து இறங்கிய சிலர், கண்இமைக்கும் நேரத்தில் சுதாசந்தரை வெட்டிச் சாய்த்து விட்டு தப்பி ஓடினர்.

இந்தச் சம்பவத்தை பார்த்த இளம்பெண் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக புழல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சுதாசந்தரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராபின்

பின்னர் கொலை வழக்கு பதிவுசெய்து, இளம்பெண் அளித்த தகவலின்படி கொலைசெய்தவர்களைத் தேடிவந்தனர். கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராம் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஆதிமூலம், இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் ஆட்டோவின் பதிவு நம்பர், சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு கடந்த சில தினங்களாக தேடிவந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டவர்கள் பதுங்கியிருக்கும் ரகசிய தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார், கொலைசெய்யப்பட்டவருடன் பைக்கில் சென்ற இளம்பெண்ணின் அண்ணன் ராபின் என்கிற பரத் (22), அவரின் சித்தப்பா உதய்ராஜ், இளம்பெண்ணின் உறவினர் சுஷ்மிதா, ஆட்டோ டிரைவர் கார்த்திக் ஆகிய நான்கு பேரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் சுதாசந்தர் கொலைசெய்யப்பட்டதற்கான காரணம் தெரியவந்தது.

இது குறித்து புழல் தனிப்படை போலீஸார், “கொலைசெய்யப்பட்ட சுதாசந்தர், சில ஆண்டுகளுக்கு முன்பு ஆவடி பகுதியில் வசித்து வந்திருக்கிறார். அப்போதுதான் அந்த இளம்பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியிருக்கிறது. இருவரும் காதலித்து வந்த நிலையில், இளம்பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு கடந்த இரண்டாண்டுக்கு முன்பு இளம்பெண்ணை வசந்த் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தனர். அதன்பிறகு சுதாசந்தர், ஆவடியிலிருந்து புழல் பகுதிக்கு குடிபெயர்ந்து விட்டார். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும் அவரின் கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. அதனால் இளம்பெண், தன்னுடைய காதலனான சுதாசந்தரிடம் தகவலைக் கூறி கதறி அழுதிருக்கிறார்.

உதய்ராஜ்

அப்போது இளம்பெண்ணுக்கு சுதாசந்தர் ஆறுதல் கூறியதோடு அவருக்கு அடைக்கலமும் கொடுத்திருக்கிறார். தன்னுடைய மனைவி, சுதாசந்தருடன் ஒரே வீட்டில் குடியிடிருப்பது வசந்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இளம்பெண்ணிடம் அவரின் குடும்பத்தினர் பேசியும், அவர் தன் கணவருடன் வாழ வரவில்லை. அவரின் இந்தச் செயலால் அவரின் குடும்பத்தினர் அவமானமடைந்தனர். அதனால் சுதாசந்தரைக் கொலைசெய்ய அவர் குடும்பத்தினர் திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்காக இளம்பெண்ணையும், சுதாசந்தரையும் சில தினங்களாக நோட்டமிட்டு வந்திருக்கிறார்கள். இந்தச் சமயத்தில்தான், கடைக்கு அவர்கள் இருவரும் பைக்கில் சென்ற தகவல் இவர்களுக்குக் கிடைத்தது.

உடனடியாக இளம்பெண்ணின் கணவர், அவர் அண்ணன் ராபின், சித்தப்பா உதய்ராஜ், உறவினர் சுஷ்மிதா, ஆட்டோ டிரைவர் கார்த்திக் உள்ளிட்ட சிலர் சுதாசந்தரையும், இளம்பெண்ணையும் கொலைசெய்ய திட்டம் போட்டனர். பின்னர், கார்த்திக் ஆட்டோவில் சுதாசந்தர், இளம்பெண் ஆகியோர் சென்ற பைக்கை பின்தொடர்ந்திருக்கிறது இந்தக் கொலை கும்பல். ஆள்நடமாட்டம் குறைவாக இருந்த பகுதியில் ஆட்டோவைக் கொண்டு பைக்கை வழிமறித்த கும்பல், சுதாசந்தரை முதலில் வெட்டியிருக்கிறது. அப்போது இளம்பெண் சத்தம் போட்டதால் அங்கு பொதுமக்கள் வந்திருக்கிறார்கள். அதைப்பார்த்த கொலை கும்பல், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

சுஷ்மிதா

சுதாசந்தர் கொலைசெய்யப்பட்ட தகவலைத் தெரிந்துகொண்ட ராபின், அவரின் உறவினர்கள் தலைமறைவாகிவிட்டனர். சுதாசந்தரின் கொலையை நேரில் பார்த்த இளம்பெண், சம்பவ இடத்துக்கு ராபின், உதய்ராஜ் கார்த்திக், வசந்த் உள்ளிட்டோர் வந்த தகவலை தெரிவித்தார். அதையடுத்து, உடனடியாக இளம்பெண் குடும்பத்தினரின் நடவடிக்கைகளைக் கண்காணித்தோம்.

அப்போதுதான் ராபின், உதய்ராஜ், கார்த்திக், சுஷ்மிதா ஆகியோர் சிக்கிக் கொண்டனர். வசந்த் உள்ளிட்ட சிலர் இன்னும் தலைமறைவாகவே இருக்கின்றனர். இந்த வழக்கில் ராபின், சுஷ்மிதா உள்பட நான்கு பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம். விசாரணையின்போது ராபின், `என் தங்கை, திருமணத்துக்குப் பிறகு இப்படியொரு வாழ்க்கை வாழ்வது எங்களுக்கு அவமானமாக இருந்தது. அதற்கு காரணமான சுதாசந்தரை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்துவிட்டோம்’ என்று கூறினார்.

கைது

இந்த தகவலைத்தான் உதய்ராஜூம் தெரிவித்தார். இந்த வழக்கில் கைதான சுஷ்மிதா, கொலைக்கான திட்டம் போடும்போது உடந்தையாக இருந்திருக்கிறார். கைதான ராபின், பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலைப்பார்த்து வருகிறார். உதய்ராஜ், ஆவடி மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக வேலைப்பார்த்து வருகிறார். சுஷ்மிதா, தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்க்கிறார். தொடர்ந்து விசாரணை நடத்துவதோடு தலைமறைவாக இருக்கும் வசந்த் உள்ளிட்ட சிலரைத் தேடிவருகிறோம். விரைவில் அவர்களையும் பிடித்துவிடுவோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.