தெலுங்கானா முதல்வருக்கு ஷூ பரிசளித்து ஆந்திர முதல்வரின் சகோதரி விடுத்த சவால்| Andhra CMs sister challenges Telangana CM by gifting shoes

ஹைதராபாத், ”தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் என்னுடன் பாத யாத்திரை வந்து மக்களின் குறைகளை கேட்க தயாரா?” என, சவால் விட்டுள்ள ஒய்.எஸ்.ஆர்., தெலுங்கானா கட்சி தலைவர் ஷர்மிளா, அவருக்கு ஒரு ஜோடி ஷூக்களை பரிசாக அளித்துள்ளார்.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், பாரத் ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.

இங்கு, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி, ஒய்.எஸ்.ஆர்., தெலுங்கானா என்ற தனிக்கட்சியை நடத்தி வருகிறார்.

ஜெகன் மோகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்து தனிக்கட்சி துவங்கினார்.

தெலுங்கானா அரசை எதிர்த்து பாத யாத்திரை துவக்கினார். இடையில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து, பாத யாத்திரைக்கு மாநில அரசு தடை விதித்தது.

இந்நிலையில், செய்தியாளர்களை நேற்று சந்தித்த ஷர்மிளா, நடைபயிற்சிக்கு பயன்படுத்தப்படும் புத்தம் புதிய ஷூக்கள் அடங்கிய பெட்டியை வைத்திருந்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

முதல்வர் சந்திரசேகர ராவுக்கு பரிசாக அளிக்கத்தான் இந்த ஷூக்களை வாங்கியுள்ளேன். அளவு சரியா இருக்கும்; இல்லாவிட்டால் ரசீதும் உள்ளே இருக்கிறது; அவர் வேறு ஷூ வாங்கிக் கொள்ளலாம்.

இந்த ஷூக்களை அணிந்து, அவர் என்னுடன் நடைபயணம் வர வேண்டும்; மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும்.

அப்போது, அவர் சொல்வதை போல, மக்கள் வறுமையில் வாடவில்லை. தெலுங்கானா மாநிலமே தங்கத்தை போல ஜொலிக்கிறது என்பது உண்மையானால், நான் அரசியலை விட்டே விலகுகிறேன்.

ஒருவேளை நான் சொல்வதை போல, விவசாயிகள் கடன் சுமையால் தவிக்கின்றனர், பெண்கள் வறுமையில் வாடுகின்றனர், வேலை வாய்ப்புகள் இல்லை, தற்கொலைகள் அதிகரித்துள்ளன என்பது உண்மை என தெரியவந்தால், அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஏற்கனவே வாக்களித்ததை போல, தலித் ஒருவரை முதல்வராக்க தயாரா…

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.