நின்ற இடத்தில் அடித்து ஆடும் எடப்பாடி: ஓடி அலையும் ஓபிஎஸ் – தீபாவையும் விட்டு வைக்கலயா?

அதிமுக உட்கட்சி மோதலில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் இரு அணிகளாக பிரிந்து நிற்கின்றனர். கட்சியின் பெரும் பகுதி
எடப்பாடி பழனிசாமி
வசமே இருக்கும் நிலையில் ஒரு சில ஆதரவாளர்களை சேர்த்துக் கொண்டு
ஓபிஎஸ்
தன்னை ஒரு அணியாக நிறுவ முயற்சி செய்கிறார் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து எடப்பாடி பழனிசாமி கட்சியின் முன்னாள் அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களை தேர்தல் பணிகளில் ஈடுபட முடுக்கிவிட்டுள்ளார். கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்திப்பது தொடங்கி எந்த முக்கிய நிகழ்விலும் அவர் நேரடியாக கலந்து கொள்ளவில்லை. நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி அவர்களை செயல்பட விட்டு ஒதுங்கிக் கொள்கிறார்.

ஆனால் ஓபிஎஸ்ஸோ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரையும் தேடிச் சென்று சந்தித்து ஆதரவு கோருகிறார். செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார். இந்த சூழலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து சென்றுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.தீபா, “குடும்ப விழாவிற்கு வருகை தருமாறு அழைப்பிதழ் வழங்க வந்தேன். அரசியல் சார்ந்த சந்திப்பு இல்லை. மீண்டும் அரசியலுக்கு வருவேனா என்பது கடவுள் கையில் இருக்கிறது. சசிகலா மீது நான் ஏற்கனவே கூறிய குற்றச்சாட்டுகளில் எந்த மாற்றமும் இல்லை. போயஸ் கார்டன் இல்லம் புனரமைக்கப்பட்ட பிறகு அங்கு குடியேறுவேன்” என்று கூறினார்.

தீபாவின் இந்த சந்திப்புக்கு பின்னரும் அரசியல் இல்லாமல் இல்லை என்கிறார்கள். இது குறித்து அரசியல் நோக்கர்கள் சிலரிடம் பேசினோம். “வீட்டு விசேஷத்துக்கு அழைப்பது சாதாரண நிகழ்வு தான். ஆனால் அரசியலில் அப்படி பார்க்க முடியாது. இங்கு கல்யாண பத்திரிக்கை வைக்கச் சென்று கூட்டணியை உறுதி செய்துவிட்டு வருவார்கள். இதற்கு பல சம்பவங்களை உதாரணமாக கூற முடியும்.

அதே சமயம் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு கொடுக்கும் அளவுக்கு தீபா பெரிய மக்கள் சக்தி அல்ல. ஆனால் இன்றைய தேதியில் ஏதாவது ஒரு நிகழ்வு மூலம் தன்னைச் சுற்றி விவாதத்தை எழுப்ப முயல்கிறார் ஓபிஎஸ். தொண்டர்கள், நிர்வாகிகள் ஆதரவு எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கும் நிலையில் தனக்கான ஆதரவை இப்படி ஏதேனும் ஒரு நிகழ்வின் மூலமும் அதன் மூலம் கிடைக்கும் மீடியா கவனம் மூலமும் பெற ஓபிஎஸ் முயற்சிக்கிறார்.

தேர்தல் ஆணையம், நீதிமன்றம், டெல்லி மேலிடம் என நீளும் கயிற்றில் எதை பிடித்து பத்திரமாக தரை இறங்கிவது என ஓபிஎஸ் யோசித்து வருகிறார். தரை இறங்குவாரா, கரை ஒதுங்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.