நீதிக்கான போராட்டம் தொடரும்: சிறையில் இருந்து விடுதலையான சித்திக் கப்பான்!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராசில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஆதிக்க சாதியினரால் 2020ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை காப்பாற்ற பெண்ணின் உடலை யாருக்கும் தெரியாமல் அம்மாநில போலீசார் அவசர அவசரமாக எரித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பானை, உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் அம்மாநில போலீசார் கைது செய்தனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் அவருக்கு தொடர்பு உள்ளதாகவும், ஹத்ராஸ் விவகாரத்தை அவர் பிரச்சினைக்குரிய வகையில் கையாள முயற்சித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சித்திக் கப்பன் மீது சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் (யுஏபிஏ) போடப்பட்டு, மதுரா சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சித்திக் கப்பன் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜாமீன் வழங்கப்படாமல் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே, தனக்கு ஜாமீன் கோரி பத்திரிகையாளர் சித்திக் கப்பான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பானுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. ஆனாலும், அவரால் சிறையிலிருந்து வெளியேற முடியவில்லை. அவர் மீது பணமோசடி வழக்கை அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த காரணத்தால் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், அந்த வழக்கிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்ததையடுத்து, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ சிறையில் இருந்து அவர் விடுதலையானார். லக்னோவில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்டம் சிறப்பு நீதிமன்றத்தில் தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான இரண்டு தனி நபர் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, இன்று காலை அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

சிறையில் இருந்து வெளியே வந்த பத்திரிகையாளர் சித்திக் கப்பான், “நான் சிறையில் இருந்து எனது தாயார் இல்லாத உலகத்திற்கு வருகிறேன். எனது தாய் மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஒரு நல்ல காரியத்திற்காக இருபத்தெட்டு மாதங்கள் சிறையில் இருந்தேன். ஒரு தலித் சிறுமிக்கு நீதி கிடைப்பதற்கான போராட்டத்திற்கும், அது குறித்து செய்தியை‌ திரட்டவும் சென்ற போது என்னை பொய்யாக புனைந்த வழக்கில் கைது செய்தனர்.

இருபத்தெட்டு மாதங்களுக்குப் பதிலாக இருபத்தெட்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டாலும், நாட்டில் கருப்பு சட்டங்களுக்கு எதிராகவும், தலித்துகள், பெண்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கான போராட்டம் தொடரும். நெல்சன் மண்டேலா இருபத்தி ஏழு வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். அதனால் நீதிக்கான போராட்டத்தை பத்திரிகை பணி மூலம் தொடர்வேன். சட்டப்போராட்டத்தில் மனைவி, பிள்ளைகள் முன்னணியில் நின்றனர். அவர்களுக்கு துணை நின்ற பத்திரிகையாளர்கள், பத்திரிகை ஊழியர் சங்கம் உட்பட அனைவருக்கும் நன்றி.” என்றார்.

சிறையில் இருந்து வெளியே வரும் போது தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டு வருகின்றீர்கள். அப்படிப்பட்ட உலகத்திற்கு வரும்போது என்ன தோன்றுகிறது என பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சித்திக் காப்பான். “ஆங்கிலேயர் காலத்தில் காந்தியும், பகத்சிங்கும் அவர்களுக்கு தீவிரவாதிகள். எந்த காலத்திலும் தீவிரவாதம் என்பது அரசியல் கருவியாக பயன்படுத்தப்படுகிறது. அதன் மூலம் யாரையும் ஒடுக்க முடியாது.மகாத்மா காந்தியை கொன்ற சித்தாந்தம் தான் நாட்டை ஆட்சி புரிகிறது. நீதிக்கான போராட்டத்தில் தீவிரவாதி என்று அழைக்கப்படுவதில் மகிழ்ச்சியே.” என்றார்.

முன்னதாக, ‘அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட ஒரு பத்திரிகையாளரின் மகள் நான்’ என கேரள மாநில பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் அரசியல், மதம் சார்ந்து நடக்கும் வன்முறைகள் குறித்து சித்திக் கப்பானின் மகள் ஹெஹ்னஸ் கப்பான் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.