“பிபிசியை இந்திரா காந்தி 2 ஆண்டுகள் தடை செய்தார்; அதுபோல்…" – உச்ச நீதிமன்றத்தில் இந்து சேனா மனு

இங்கிலாந்தின் பிரபல தனியார் ஊடக நிறுவனமான பிபிசி, இந்தியாவில் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் பற்றி ரகசிய விசாரணை நடத்தி ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. இதில் இந்த கலவரத்துக்கு அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியும் காரணம் என கூறியிருப்பதாக தகவல் வெளியானது பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியது. இந்த ஆவணப்படத்துக்கு பல்வேறு தரப்பினரிடையே ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.

பிபிசி ஆவணப்படம்

அதைத் தொடர்ந்து, அந்த ஆவணப்படத்துக்கு இந்திய அரசு தடைவிதித்தது. ஆனாலும், அதை கல்லூரி மாணவர்கள் தங்கள் பயிலும் கல்லூரிகளிலும், சில அரசியல் கட்சிகள் பொதுவிலும் திரையிடல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா மற்றும் பீரேந்திர குமார் சிங் ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 2014 முதல் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி, புதிய வேகத்தை எட்டியுள்ளது, இந்திய எதிர்ப்பு நிலைபாடு கொண்டவர்கள், ஊடகங்கள், குறிப்பாக பிபிசியால் இதை ஜீரணிக்க முடியவில்லை.

பிபிசி இந்தியாவிற்கும் இந்திய அரசுக்கும் எதிராக ஒரு சார்புடையது. 2020 குஜராத் கலவரம் குறித்த நானாவதி கமிஷன் அறிக்கை அப்போதைய குஜராத் அரசின் அமைச்சர்களை வன்முறையுடன் தொடர்புபடுத்த எந்த ஆதாரமும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்க்கிறது. அதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. எனவே, இந்த ஆவணப்படம், நரேந்திர மோடிக்கு எதிரான பிரசாரத்தின் பிரதிபலிப்பு மட்டுமல்ல, இந்தியாவின் சமூகக் கட்டமைப்பை அழிக்க பிபிசியின் இந்து மதத்திற்கு எதிரான பிரசாரத்தையும் பிரதிபலிக்கிறது.

இந்திரா காந்தி

பிபிசி இந்தியாவுக்கு எதிரான மற்றும் இந்திய அரசுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறது. 1967 முதல் 1969 வரை கல்கத்தாவை முன்னிலைப்படுத்தி ஒரு ஆவணப்படம் எடுத்து,1970-ம் ஆண்டு பிபிசி மூலம் படம் ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, இந்தியாவில் பிபிசியை இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்தார். இந்தியாவில் பணியமர்த்தப்பட்ட பிபிசியின் பிரிட்டிஷ் ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

மேலும் இந்திய ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். 1975-ம் ஆண்டில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 41 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இந்தியாவுக்கு எதிரான மோசமான செய்திகளை ஒளிபரப்பிய பிபிசியை இந்திய மண்ணில் மீண்டும் செய்தி வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று அரசைக் கேட்டுக் கொண்டனர். பிபிசியை தடை செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கடந்த ஜனவரி 27-ம் தேதி மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

திரையிடப்படும் பிபிசி-யின் ஆவணப்படம்

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19(1) முழுமையான உரிமையல்ல, மேலும் இது அரசியலமைப்பின் 19(2) பிரிவின் கீழ் வழங்கப்பட்ட நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. பிபிசி இந்தியாவை முன்னிறுத்துவதன் மூலம் எதிர்மறையான விளம்பரத்தை நடத்த முடியாது. இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி இந்தியப் பிரதமர் குற்றவாளியாகத் காண்பிக்கப்பட்டிருக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.