மத்திய பட்ஜெட்: `அப்பா விமர்சனம், மகன் பாராட்டு' – ப.சிதம்பரம் vs கார்த்தி!

பட்ஜெட் தாக்கல்:

2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப் 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவர், “புதிய வரி விதிப்பின் கீழ் வருமான வரி தள்ளுபடி வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்படுகிறது. புதிய வரி விதிப்பு இனி இயல்புநிலை வரி விதிப்பாக இருக்கும். இந்த ஆண்டு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத்துறையில் புதுமைகளை ஊக்குவிப்பது முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

2023-2024 பட்ஜெட்

மூலதன முதலீட்டுச் செலவும் 33 சதவீதம் அதிகரித்து ரூ.10 லட்சம் கோடியாக இருக்கிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாக இருக்கும்” என்பது உள்ளிட்ட விவரங்களைத் தெரிவித்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் மத்திய பட்ஜெட்டை ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்திருக்கும் நிலையில் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆதரவு தெரிவித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

“இரக்கமற்ற பட்ஜெட்…”

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், “மக்களுக்கு உண்மையில் என்ன தேவை என உணர்ந்துகொள்வதில் பா.ஜ.க அரசு விலகிவிட்டது. இந்த பட்ஜெட் ஏழைகள், வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள், வேலை இழந்த தொழிலாளர்கள், வரி செலுத்துவோர், இல்லத்தரசிகள், சமத்துவமின்மை பேசும் சாமானியனுக்கான பட்ஜெட் அல்ல. இது முற்றிலும் பெரும்பான்மை மக்களுக்குச் செய்த நம்பிக்கை துரோகம். ஏழைகள், பணக்காரர்கள் இடைவெளியை மேலும் அதிகரிக்கும் இரக்கமற்ற பட்ஜெட்.

ப.சிதம்பரம்

எந்த வரியும் குறைப்பதற்கான அறிவிப்பு இல்லை. ஆனால், புதிய வரிகள் திணிக்கப்பட்டிருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வேலையின்மை, வறுமை, சமத்துவமின்மை போன்ற வார்த்தைகளை உரையில் பயன்படுத்தவே இல்லை. ஆனால், இந்திய மக்கள் மீதுள்ள கருணை அடிப்படையில் இருமுறை ஏழை என்னும் வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். இதிலிருந்து, உண்மையில் மக்கள்மீது யாருக்கு அக்கறை இருக்கிறது, யாருக்கு இல்லை என்பதை இந்திய மக்கள் நன்கு அறிந்துகொள்ளலாம்” என தெரிவித்திருக்கிறார்.

“வரவேற்கத்தக்கது…”

மறுபுறம் மத்திய பட்ஜெட்டை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் வரவேற்று கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து மேலும் அவர், “நான் குறைந்த வரி விதிப்பில் நம்பிக்கை கொண்டவன். எனவே, எந்தவொரு வரிக் குறைப்பும் வரவேற்கத்தக்கது. ஏனெனில், மக்களின் கைகளில் அதிக பணத்தை வழங்குவது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான சிறந்த வழி” என தெரிவித்திருக்கிறார். இவ்வாறு தந்தையும், மகனும் ஒரே விஷயத்தில் மாறுபட்ட கருத்து தெரிவித்திருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் ஆய்வாளர் துரை கருணா, “மத்திய பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 2024-ல் நடக்கவிருக்கும் தேர்தலை மையப்படுத்தியது தான் இந்த பட்ஜெட். எனவே அனைத்து தரப்பு மக்களையும் மையப்படுத்தித் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாத அமைப்புகளும், சங்கங்களும் வரவேற்த்திருக்கிறது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒரு சம்பிரதாயத்திற்காக எதிர்க்க வேண்டும் என்பதற்காகத் தான் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள்.

துரை கருணா

இதில் ப.சிதம்பரமும் அடங்குவார். கார்த்தி சிதம்பரத்தைப் பொறுத்தவரை வெளிப்படையாக விமர்சனம் செய்யக்கூடியவர். தலைமையின் போக்கு சரியில்லை என்றால் கூட விமர்சனம் செய்யும் தன்மை கொண்டவர். எனவே தான் இந்த பட்ஜெட்டில் இருக்கும் நல்ல அம்சங்களை வரவேற்கிறார். ஒரே குடும்பத்தில் வேறு, வேறு கட்சியில் இருந்து கொண்டு மாறுபட்ட கருத்து சொல்வதை விட ஒரே கட்சியிலிருந்து கொண்டு வெவ்வேறு கருத்துக்களைச் சொல்வது வரவேற்கத்தக்கது தான்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.