முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட உத்தரவு – கலெக்டர்கள் கப்சிப்!

அரசு திட்டங்களை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்படக் கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஏ.வ.வேலு, உள்ளிட்டோரும், துறை சார்ந்த அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மக்களுக்கான திட்டங்கள், அவற்றின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தேன். நிர்வாகம் நல்ல வகையில் மேம்பட வேண்டும். கள ஆய்வில் சுணக்கம் ஏற்பட்ட திட்டப் பணிகள் குறித்து அடையாளம் காணப்பட்டது. பல வழிமுறைகளில் திட்டங்கள் பிறந்தாலும் அதனை முழுமையாக மக்களிடம் கொண்டு செல்லும் பொறுப்பு அரசு அலுவலர்களுக்கு உள்ளது.

இந்த களப்பணி மற்றும் ஆய்வுக் கூட்டத்தை பயன்படுத்திக்கொண்டு துறை தலைவர்களும் அரசு செயலர்களும் உரிய தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திட்ட செயலாக்கத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமென்றால், அதற்கான திருத்த ஆணை வெளியிடலாம். நிதி தேவை அல்லது பணியாளர் பற்றாக்குறை இருந்தால் அதைச் சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செயலாளர்களையும், துறைத் தலைவர்களையும் இதைத்தான் நான் வலியுறுத்தி, வற்புறுத்தி கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

வழக்கமாக தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முதன்மைச் செயலாளர்கள், துறைத் தலைவர்களைத் தான் நான் சந்திப்பேன். அதோடு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆய்வுக் கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். ஆனால் அதைவிட இப்படி அடுத்தகட்ட அலுவலர்களோடு அந்த மண்டலத்திற்கே வந்து கலந்துரையாட வேண்டும் என்று முடிவு செய்து, அந்தப் பணியை இப்போது நிறைவேற்றத் தொடங்கி இருக்கிறோம்.

நீங்கள் எல்லோரும் ஒவ்வொரு திட்டத்தின் செயல்பாடு மற்றும் அதன் காரணமாக மக்கள் பெறக்கூடிய பயன்கள் குறித்து பார்க்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள். திட்டங்களின் சாதக, பாதகங்கள் என்ன என்று கண்ணுக்கு முன்னால் கவனிப்பவர்கள் நீங்கள். அந்த அடிப்படையில் இந்தக் கூட்டம் மிகமிக முக்கியமான கூட்டமாக அமைந்திருக்கிறது.

அதே போல் எல்லோரையும் ஒருசேரச் சந்திப்பதும் மிகமிக முக்கியமானது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையைக் கவனித்து வந்தாலும் –

யாரும் தனியாகச் செயல்பட முடியாது. அப்படி செயல்பட முற்பட்டால் அது தாமதத்திற்கு தான் வழிவகுக்கும். அரசுத் துறைகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. அதனால், பலரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் அடிப்படையான வழிமுறை.

உங்கள் பணிகளையெல்லாம் இணைக்கும் ஒரே விபரம் மக்கள் நலன். அதனை நீங்கள் மறக்கவே கூடாது. பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுதல், அரசு நலத்திட்டங்களின் பயனடைதல் ஆகியவை எளிமையாக நடைபெற வேண்டும். மக்கள் இதற்காக சில இடங்களில் அலைய வைக்கப்படுகிறார்கள் என்ற தகவலும் வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியாளர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும். சிறப்பாக பணியாற்றக்கூடிய அலுவலர்களை பாராட்டுங்கள், அது மற்றவர்களை ஊக்கப்படுத்தும். பின்தங்கும் அலுவலர்களுக்கு வழிகாட்டி, அவர்களது பணியும் மேம்படுவதை மாவட்ட ஆட்சியாளர்களே நீங்களும் துறைத்தலைவர்களிடம் உறுதி செய்ய வேண்டும். அனைத்து துறை வளர்ச்சி என்ற இலக்கோடுதான் நாம் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம். அத்தகைய சிந்தனையோடுதான் திட்டங்களை தீட்டி வருகிறோம்.

தமிழ்நாடு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள், ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டிருக்கக்கூடிய வாக்குறுதிகள் இதையெல்லாம் முதல்கட்ட அடிப்படையாக வைத்து திட்டங்களை தீட்டினோம். அடுத்த கட்டமாக அமைச்சர்கள் – செயலாளர்கள், அவர்களோடு கலந்துரையாடல்கள் மூலமாக பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன்பிறகு சட்டமன்றக் கூட்டத்தொடரில் வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

அரசின் சார்பில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு மூலமாக பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையிலும் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. மாவட்ட நிர்வாகமாகிய உங்கள் கோரிக்கைகளின் அடிப்படையிலும் பல திட்டங்கள் தீட்டப்பட்டன. இப்படி பல்வேறு வழிமுறைகளில் திட்டங்கள் பிறந்தாலும் அதனை முழுமையாக மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் அலுவலர்களாகிய உங்களுக்குத்தான் அதிகம் இருக்கிறது.

அடுத்ததாக, ஒவ்வொரு திட்டமும் என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் சிதையாமலும், அந்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றிக் காட்டும் வகையிலும் உங்களது செயல்பாடுகள் அமைய வேண்டும்.

பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒவ்வொரு திட்டமும் அறிவிக்கப்படுகிறது. பல்வேறு நிதி அமைப்புகளிடம் அரசு கருவூலத்தில் இருக்கும் பணத்தின் மூலமாக மட்டுமல்ல, கடன் வாங்கியும் பல திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. மக்களின் வரிப்பணமும் அரசின் நிதியில் உள்ளது. அதனால் திட்டங்களுக்கான நிதி வீணாகிவிடாமல் விரைவாகவும் – சிக்கனமாகவும் திட்டங்களை நீங்கள் செயல்படுத்த வேண்டும்.

திட்டப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதிக்குள் குறைவாகச் செலவு செய்து பணியை முடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதே போல் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாக திட்டப்பணிகளை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

ஏதாவது ஒரு திட்டம் முடக்கப்பட்டாலோ, சுணக்கமாக நடந்தாலோ அது அரசின்மீது விமர்சனமாக வைக்கப்படுகிறது. எனவே, இதில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்தந்த நிதி ஆண்டுக்கான பணிகள் அந்த ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும். டெண்டர் விட்டோம் – திட்டத்தை முடித்துத் தர வேண்டியது ஒப்பந்ததாரரின் வேலை என்று இருந்து விடாமல் அதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய கடமை உங்களுடைய கடமை.

சார்நிலை அலுவலர்களின் பணியை கண்காணித்து, ஒருங்கிணைத்து செயல்படாததால் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதில் காலதாமதமும் தொய்வும் ஏற்படுகிறது என்று நான் கருதுகிறேன். எனவே, இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களை, கண்காணிப்பு கூட்டங்களை, திட்டமிடும் கூட்டங்களை, கலந்துரையாடும் கூட்டங்களை உங்களுக்கு கீழே இருக்கக்கூடிய அதிகாரிகளுடன் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து தீவிர கள ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள். மக்களோடு கலந்து பழகுங்கள், அவர்களின் தேவையை உணர்ந்து செயல்படுங்கள். அரசு ஆணைகளை மட்டும் செயல்படுத்துவராக இல்லாமல், உங்களது கனவுத் திட்டங்களையும் அரசுக்குச் சொல்லி, அதனையும் செயல்படுத்த முனையும் திறன் கொண்டவர்களாக நீங்கள் அனைவரும் இருக்க வேண்டும்.

அரசினுடைய முன்னுரிமை பணிகள் (Priority items) எவை என்பதை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும். மாவட்ட அளவில் இருக்கும் நீங்கள் உங்களது மாவட்ட எல்லைக்குட்பட்ட பணிகளை உன்னிப்பாக, கவனமாக கண்காணித்து செயல்படுத்தினால் அனைத்து திட்டங்களும் முழுமையாக மக்களை போய் சென்றடையும். அடுத்த, அடுத்த மாதத்தில் தமிழ்நாடு அரசினுடைய நிதிநிலை அறிக்கை தாக்கல் ஆக இருக்கிறது. அதன்பிறகு, அமைச்சருடைய துறை மானியக் கோரிக்கைகள் தாக்கல் ஆக இருக்கிறது. புதியபுதிய திட்டங்கள் ஏராளமாக சேர்ந்துவிடும். அதற்கு முன்னதாகவே, இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திக் காட்டுங்கள் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.

பல ஆண்டு அனுபவமும் பல்துறை ஆற்றலும் கொண்டவர்கள் நீங்கள். உங்களுக்கு இதற்கு மேல் சொல்லத் தேவையில்லை. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் வெகுசிறப்பாக செயல்பட வேண்டும் என்பதுதான் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தினுடைய நோக்கம். அதற்கு இந்த ஆய்வுக்கூட்டம் ஒரு சிறப்பான முதல் படியாக அமைந்திருக்கிறது என்று நான் கருதுகிறேன்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.