2023-2024ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் தாக்கல்: பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.79,000 கோடி ஒதுக்கீடு

ஒன்றிய அரசின் வீட்டு வசதி திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அதன்படி “பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்துக்கான நிதி 66 சதவீதம் உயர்த்தப்பட்டு, ரூ.79,000 கோடி ஒதுக்கப்படுகிறது. மாநிலங்களும், நகரங்களும் நகர்ப்புற திட்டமிடலை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படும். மேலும் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி போன்று, நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டு, அது  தேசிய வீட்டு வசதி வங்கியால் நிர்வகிக்கப்படும். நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிக்காக ஒன்றிய அரசு ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யும். கழிவுநீர் கால்வாய்கள், கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் பணிகளுக்கும், சாக்கடைகளை தூர்வாரும் பணிகளுக்கும் இனி மனிதர்களுக்கு மாற்றாக 100 சதவீதம் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்” இவ்வாறு குறிப்பிட்டார்.

* ஜி20 தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு சிறந்த வாய்ப்பு
உலகம் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் இக்கட்டான சூழலில் இந்தியா ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இது உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்த சிறந்ததொரு வாய்ப்பை வழங்கி உள்ளது. உலகளாவிய பொருளாதார சவால்களை எதிர்கொள்ளவும், நிலையான பொருளாதார வளர்ச்சியை எளிதாக்கவும் குடிமக்களை அடிப்படையாக கொண்ட திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது என்று ஒன்றிய நிதியமைச்சர நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

* ஏகலைவா பள்ளிகளில் 38 ஆயிரம் ஆசிரியர்கள்
நாடு முழுவதும் 3.5 லட்சம் பழங்குடியின மாணவர்கள் பயிலும் 740 ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 38,000 ஆசிரியர்கள் மற்றும் துணைப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

* சிபிஐ.க்கு ரூ.946 கோடி
2023-24ம் நிதியாண்டில் ஒன்றிய புலனாய்வு அமைப்பான சிபிஐ.க்கு பட்ஜெட்டில் ரூ.946 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டைக் காட்டிலும் 4.4 சதவீதம் கூடுதலாகும். 2022-23ம் நிதியாண்டில் சிபிஐ.க்கு ரூ.841.96 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

* கல்வெட்டுகள் டிஜிட்டல் மயம்
நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பாரத் ஸ்ரீ என்ற பெயரில் கல்வெட்டு களஞ்சியம் தொடங்கப்படும். முதற்கட்டமாக ஒரு லட்சம் பழங்கால கல்வெட்டுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். ஈரநிலங்களின் சரியான பயன்பாட்டை ஊக்குவிக்கவும், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தவும் அம்ரித் தரோகர் என்ற திட்டம் அடுத்த 3 ஆண்டுகளில் தொடங்கப்படும். பல நிலையான வளர்ச்சி இலக்குகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

* விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2.2லட்சம் கோடி
பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 11.4 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக வங்கி கணக்கில் ரூ.2.2லட்சம் கோடி உதவித்தொகையாக செலுத்தப்பட்டுள்ளது. வேளாண் துறைகளுக்கான கடனுதவி 2021ம் ஆண்டில் ரூ.15.8லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2022ம் நிதியாண்டில் ரூ.18.6லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

* பழங்குடியினர் மேம்பாட்டிற்கு ரூ.15,000 கோடி
பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் பழமையான பழங்குடியின குழுக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.15,000 கோடி ஒதுக்கப்படும். இதன் மூலம் பாதுகாப்பான வீடுகள், சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து, சாலை மற்றும் தொலைத்தொடர்பு இணைப்பு மற்றும் நிலையான வாழ்வாதாரத்திற்கான மேம்பட்ட அணுகல் போன்ற அடிப்படை வசதிகள் பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் வாழ்விடங்களில் ஏற்படுத்தி தரப்படும்.

* பங்குகள் விற்பனை மூலம் ரூ.51,000 கோடி
ஒன்றிய பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ.51 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்த இலக்கு ரூ.65,000 கோடியாக இருந்தது. ஆனால், இதுவரை ரூ.31,100 ேகாடிக்கு மட்டுமே பங்குகள் விற்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 4வது ஆண்டாக இலக்கை எட்ட முடியாமல் ஒன்றிய அரசு தவற விட்டுள்ளது.அரசு சொத்துக்களை பணமாக்குவதன் மூலம் வரும் ஆண்டு சுமார் ரூ.10,000 கோடி கிடைக்கும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

*  விண்வெளித்துறைக்கு நிதி குறைப்பு
விண்வெளித்துறைக்கு ரூ.12,544 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால்  2022-23க்கான பட்ஜெட்டில் ரூ.13,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் இந்த பட்ஜெட்டில் சுமார் 8 சதவீதம் குறைவாக உள்ளது.

* நகர்ப்புற உள்கட்டமைப்புக்கு ரூ.10,000 கோடி
நகரங்களில் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக, ஆண்டுக்கு ரூ.10,000 கோடி நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை அரசு உருவாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னுரிமைத் துறை கடன் பற்றாக்குறையைப் பயன்படுத்தி இந்த நிதி நிறுவப்படும். தேசிய வீட்டுவசதி வங்கியால் நிர்வகிக்கப்படும் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட நகரங்கள் (டயர்-2), 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மக்கள்தொகை உடைய( டயர் 3) நகரங்களில் நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்க பொது நிறுவனங்கள் பயன்படுத்தப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.