அ.தி.மு.க.,வில் பழனிசாமி தரப்புக்கு… அதிர்ச்சி!| ADMK, Will Palaniswami side… shock!

அ.தி.மு.க., விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்த பதில், பழனிசாமி தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட, ஜூலை 11 பொதுக் குழுவை ஏற்கவில்லை என்றும், இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து, தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும், தேர்தல் ஆணையம் ‘பளிச்’ பதில் அளித்துள்ளது.

அ.தி.மு.க.,வில் பழனி சாமி தரப்பினர், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்திய பொதுக் குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச் செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்; ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இதை எதிர்த்து பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரித்தது. விசாரணை முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு, வரும் 27ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில், பழனிசாமி – பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். இதனால், கட்சியின் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது.இதையடுத்து, பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ‘என் கையெழுத்துடன் கூடிய வேட்பாளர் பெயரை ஏற்க, தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது.

‘எனவே, என்னை அ.தி.மு.க., இடைக்காலப் பொதுச் செயலராக அங்கீகரித்து, நான் கையெழுத்திட்ட வேட்பாளருக்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு, கடந்த மாதம் 30ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இடையீட்டு மனு தொடர்பாக, தேர்தல் ஆணையம் மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். ‘மனு நகல்களை, பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்புக்கும் வழங்க வேண்டும். பன்னீர்செல்வம் தரப்பும் தன் பதிலை தெரிவிக்க வேண்டும்’ எனக் கூறி, விசாரணையை பிப்., 3க்கு உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்தது.அந்த உத்தரவை ஏற்று, தேர்தல் ஆணையம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலராக பழனிசாமியை, தேர்தல் ஆணையம் இன்னமும் ஏற்கவில்லை. ஏனெனில், கடந்த ஆண்டு ஜூலை 11ல் நடந்த, அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்கள் ஏற்கப்படவில்லை. அந்த பொதுக்குழு கூட்டப்பட்டதும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் கேள்விக்குறியாகி உள்ளது.இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை, ஒரு கட்சியின் செயல்பாடுகளை கண்காணிப்பதோ, முறைப்படுத்துவதோ இல்லை. கட்சிகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை.

இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக் கோரி, யாரும் தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை. இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற பழனிசாமியின் கோரிக்கை தொடர்பாக, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் பன்னீர்செல்வம் தரப்பிலும், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘அ.தி.மு.க., பிரதிநிதி என்ற முறையில், பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்ய உரிமை இல்லை. அவர் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ‘பொதுக்குழு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ள நிலையில், பழனிசாமியின் இடையீட்டு மனுவை ஏற்கக் கூடாது.

பழனிசாமி இடையீட்டு மனு, நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தும் வகையில் உள்ளது’ என கூறப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கவில்லை என்றும், இடைக்கால பொதுச்செயலராக பழனிசாமியை அங்கீகரிக்கவில்லை என்றும், தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியிருப்பது, பழனிசாமி தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.- நமது நிருபர் –

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.