சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கினால் மேகதாதுவில் அணை கட்ட அரசு தயார் : கர்நாடக முதல்-மந்திரி பேட்டி

பெங்களூரு,

கர்நாடக அரசு கர்நாடகம் – தமிழ்நாடு எல்லையில் ராமநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட முடிவு செய்து அதற்காக முயற்சித்து வருகிறது.

இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அடிக்கடி டெல்லி சென்று மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் பெங்களூருவில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

“பிரதமர் மோடி நமது நாட்டை வேகமாக முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இருந்து வருகிறார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தீவிரமாக உழைக்கிறார். அதற்கான திட்டங்களையும் வகுத்து வருகிறார். மத்திய பட்ஜெட்டை நேற்று (நேற்று முன்தினம்) நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருப்பது அனைவரும் அறிந்தது.

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் கர்நாடகத்திற்கும் கிடைக்க உள்ளது. கர்நாடகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள மத்திய பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேகதாது திட்டத்தை தொடங்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கினால், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உடனடியாக பணிகளை தொடங்க அரசு தயாராக உள்ளது. ஏற்கனவே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை பயன்படுத்தி கொண்டு, அதற்கான பணிகள் தொடங்கப்படும். மேகதாது அணை கட்டும் திட்டத்தில் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி இல்லாத பட்சத்தில் எதுவும் செய்ய சாத்தியமில்லை.

திட்ட அறிக்கை கூடிய விரைவிலேயே அணை கட்டும் பணிகள் தொடங்கப்படும். முந்தைய பட்ஜெட்டில் மேகதாது திட்டத்திற்காக ரூ.1,000 கோடியை கர்நாடக அரசு ஒதுக்கி இருந்தது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால், கர்நாடகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்காக கூடிய விரைவில் நிதி கிடைக்க உள்ளது.”

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.