பேனாவை உடைக்க ’துணிவு’ இருக்கா? சீமானுக்கு திமுக பகிரங்க சவால்!

அஜித் நடித்த பொங்கல் ரிலீஸான துணிவு திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இதன் பரபரப்பு ஓய்ந்த நிலையில் துணிவு ஸ்டைலை திமுக தரப்பு கையிலெடுத்து மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியுள்ளது. அதுவும் நாம் தமிழர் தம்பிக்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக. இதென்ன புதுசா இருக்கு என்று நீங்கள் கேட்கலாம். எல்லாம் கடந்த சில நாட்களாக நடக்கும் கலைஞரின் பேனா நினைவு சின்னம் தொடர்பான விவகாரம் தான்.

பேனா நினைவு சின்னம்

இதற்காக 81 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, சென்னை மெரினாவில் கலைஞரின் நினைவிடத்தில் இருந்து சற்று தொலைவில் வங்கக் கடலில் பிரம்மாண்ட பேனா நினைவு சின்னம் அமைக்க திமுக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் கடலில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றெல்லாம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் கருத்து கேட்பு கூட்டம்

இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் சார்பில் சமீபத்தில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு பேசினர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்
சீமான்
, கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் வைக்கக் கூடாது என்று சொல்லவில்லை. அதை ஏற்கிறோம். கடலில் வைக்கக் கூடாது.

எங்கிருந்து பணம் வருது?

பள்ளிகளுக்கு செலவு செய்ய காசு இல்லை. சின்னம் அமைக்க மட்டும் எங்கிருந்து காசு வருகிறது? பேனா நினைவு சின்னம் அமைப்பதை தடுக்க கடும் போராட்டம் நடத்துவோம். சின்னம் வைக்கட்டும். ஒருநாள் வந்து அதை உடைக்கிறேனா? இல்லையா என்று பாருங்கள் என்று சவால் விடுத்து பேசி பரபரப்பை கிளப்பினார். இந்த பேச்சு பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

திமுக பதிலடி

இந்நிலையில் சீமானுக்கும், நாம் தமிழர் தம்பிகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக தரப்பில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. துணிவு படத்தின் போஸ்டரை டிசைனை எடுத்துக் கொண்டு அதில் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். அதாவது, கலைஞரின் முரட்டு பக்தர்கள் உயிர் இருக்கும் வரை உனக்கு பேனாவை உடைக்க ’துணிவு’ இருக்கா?

துணிவு இருக்கா?

நாம் தமிழர் என்று சொல்பவன் எல்லாம் தமிழன் இல்லை. தமிழன தலைவர் கலைஞரை போற்ற தெரிந்தவர்களே உண்மையான நம் தமிழர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் கழக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு ஜெ.எம்.பஷீர் என்பவரால் சென்னையின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருக்கிறது.

தமிழினத் தலைவர்

கிட்டதட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் தமிழர்கள் இல்லை என்பது போல் சுட்டிக் காட்டியுள்ளனர். கலைஞர் கருணாநிதியை தவிர்த்து விட்டு தமிழர் என்ற அடையாளத்தை பெருமையாக கொண்டாடுவது முறையல்ல. தமிழினத்தின் வரலாற்று பாதையில் தவிர்க்க முடியாத ஒரு தலைவர் எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனை திமுக உடன்பிறப்புகள் பலரும் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.