40 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ; அண்ணா!

வாய்மைக்கு முதல் வழி வறுமையே! 
திறமை வெளிவர வறுமைதான் மூலதனம்!! 
அந்த மூலதனம்தான் அறிவார்ந்த மனிதர்களை உருவாக்குகிறது” என்றார் பேரறிஞர் அண்ணா.
தாய்மொழியான தமிழ்மீது அவருக்கு தீராத காதல் உண்டு. அறிவின் உச்சமாக திகழ்ந்த அவரது வசீகர பேச்சானது ; அனைவரையும் கவர்ந்திழுத்தது என்றால் அது மிகையாகாது!

“பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் பொதுமக்களின் சேவகன் ஆவர். ஆகையால், இந்த சேவகனுக்கு கட்டளையிடுங்கள் ; பணியாற்ற காத்திருக்கிருக்கிறேன்” என்றார், முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா. இன்று அவருக்கு 54வது நினைவுநாள். இந்நன்னாளில் அவரது நினைவுகளைப் போற்றுவோம்.

உலகின் தலைசிறந்த எழுத்தாளர்கள் மற்றும்
பேச்சாளர்களான
கிரேக்கத்தைச் சேர்ந்த
டோமஸ்தெனி, இங்கிலாந்தின்
எட்மண்ட் பர்க், அமெரிக்காவின்
ராபர்ட் கிரின், இங்கர்சால், வில்லியம் ஷேக்ஸ்பிரியர், ஜார்ஜ் பெர்னாட்ஷா , மில்டன், கார்க்கி ஆகியோரின் வரிசையில் இடம்பிடித்து தன் பேச்சாற்றலால் உலகையே திரும்பி பார்க்கவைத்த பேராற்றல் அவரிமிருந்து அதிகமாகவே இருந்தது. ஆதலால், அறிஞர்கள் பலரும் போற்றும் வகையில் தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அண்ணா அழைக்கப்பட்டார்.

அவர் தன் வசீகர பேச்சால் பகுத்தறிவை தமிழ் நாடெங்கும் பரப்பினார். அவற்றைப் படிப்பறிவில்லாத பாமரர்களிடமும் கொண்டுபோய் சேர்த்தார் ; அதன் மூலம் தமிழ்நாட்டில்ல் தொடர்ந்து 40ஆண்டுகளாக ஆட்சி புரிந்துவந்த காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் . தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார். அதன் பயனாக அவரது தலைமையிலான திமுக அரசு தமிழ்நாட்டின் ஆட்சி பொறுப்பை ஏற்றது. அண்ணா முதலமைச்சர் எனும் அரியணையில் அமர்ந்தார்.

அண்ணாவின் பேச்சுக்கு உலகெங்கும் அதிக வரவேற்பு கிடைத்தன. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் அவரது வசீகர பேச்சைக் கேட்பதற்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர்.
இந்நிலையில் அண்ணாவின் பேச்சு உலகெங்கும் பயணிக்கத் தொடங்கின.
ஒருமுறை அமெரிக்காவிலுள்ள
யேல் பல்கலைக்கழகத்தில் அண்ணாவிடம்,
“ஆங்கில புலமைபெற்ற குறும்புக்கார மாணவர் ஒருவர்,

‘Because’ என்ற வார்த்தையை ஒரே வாக்கியத்தில் அடுத்தடுத்து முதலிலும் இடையிலும் மும்முறை வருமாறு கூறுக” என்றார்.
அதற்கு அண்ணா, “Because do not come in the middle of a sentence. because, because is an adverb a conjunction” என்றார். இதன் பொருள் :
எந்த தொடரிலும் இறுதியில் வராத சொல் ஏனென்றால். ஏனென்றால் ; ஏனென்றால் என்பது ஓர் இணைப்பு சொல் என்று கொஞ்சம்கூட தாமதிக்காமல் உடனடியாக பதிலளித்தார். அண்ணாவின் அறிவார்ந்த பதில் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது!

காதல் குறித்து இன்னொரு மாணவர் அண்ணாவிடம் கருத்தறிய விரும்பினார். அதற்கு அவர், “love is above the belt ; lust is below the belt”
காதல் இதயம் தொடர்பானதென்றும் ; காமம் உடல்தொடர்பானதென்றும் பதிலளித்தார்.

அந்தளவிற்கு பேரறிஞர் ஆங்கிலத்தில சரளமாக பேசுவதற்கு் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். அவரின் பழுத்த அறிவு, கூரியமதிநுட்பம், சுருக்கம், தெளிவு, ஓசைநயம், அறிவாழம் முதலியன அவரது ஆங்கில புலமையை வெளிப்படுத்தியது.

அண்ணாவின் வசீகர பேச்சு வானளாவிய புகழைக்கொண்டது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக லண்டனில் நடைபெற்ற கூட்டத்தைச் சொல்லலாம். பல்வேறு நாடுகளில் இருந்து அக்கூட்டத்துக்கு பலரும் வந்திருந்தார்கள். அண்ணாவும் அதில் பங்கேற்றார். அப்போது அங்கு நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், “ஆங்கிலத்தில் “Complete” என்ற சொல்லுக்கும், “Finished” என்ற சொல்லுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்ற கேள்வி எழுந்தது. அக்கூட்டத்தில் உள்ள பலரும் இரண்டு சொல்லுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை” என்று கூறினார்கள். அப்போது அண்ணா கூறினார்,”நீங்கள் ஒரு சரியான பெண்ணை திருமணம் செய்தால், உங்கள் வாழ்க்கை “Complete”. அதுவே, “நீங்கள் ஒரு தவறான பெண்ணை திருமணம் செய்தால், உங்கள் வாழ்க்கை “Finished”.
அதுவே அந்த சரியான பெண் உங்களை ஒரு தவறான பெண்ணுடன் கையும் களவுமாக பிடித்துவிட்டால் உங்கள் வாழ்கை “completely Finished ” என்றார்.

இந்த விளக்கத்தை கேட்ட கூட்டத்தினர் எழுந்து நின்று 5 நிமிடம் இடைவிடாமல் கைத்தட்டினர். அக்கரவொலியால் அண்ணாவின் புகழ் உலகெங்கும் ஓங்கி ஓலித்தன. அவரது அறிவார்ந்த பேச்சால் அண்ணா ஓர் அறிவின் உச்சம் என்பதை உலகமும் ஏற்றுக்கொண்டு அவற்றைப் பறைசாற்றியது.

நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை நாடெங்கும் எதிரொலித்தன. உலக நாடுகளும் அவற்றை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கின.

அறுதி பெரும்பான்மையுடன் நேரு பிரதமராக இருந்த காலத்தில் நாடாளுமன்றத்தையே நடுநடுங்க வைத்தார் அண்ணா.

பெருவாரியாக பேசும் இந்தியை ஆட்சிமொழியாக்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? என்று முன்னாள் பிரதமர் நேரு கேட்டபோது,

அப்ப அதிகமாக வாழும் காக்கையை தேசிய பறவையாக ஆக்காமல் மயிலை ஆக்கியது ஏன் என்று எதிர் கேள்வி தொடுத்தார், அண்ணா.

மெட்ராஸ் மாகாணத்தை ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதால் என்ன நடக்கபோகிறது என்று நேரு கேட்டதற்கு…

ராஸ்டிரபதி பவனை ஜனாதிபதி மாளிகையாக்கியதால் என்ன விளைந்ததோ? அதுவே, ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றுவதற்கும் என்று எடுத்துரைத்தார், அண்ணா. 
இவ்வாறு நேருவின் கேள்வி கணைகளுக்கு பேரறிஞர் அளித்த அதிரடி பதிலானது ; நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!

மேலும் தனி தமிழ்நாடு – திராவிட நாடு என்ற பிரிவினைக்கான காரணங்களை அண்ணா நாடாளுமன்ற மேலவையில் 1962-ல் முன்மொழிந்தார். அப்போது அவையில் இருந்தோர் அதிர்ந்துபோனார்கள். 

இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் அறிவார்ந்த பேச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல், இரு அவைகளையும் கூட்டி பிரிவினைவாத தடுப்பு சட்டத்தை, அண்ணா என்கிற தனி மனிதருக்காக அவசர அவசரமாக கொண்டுவந்தார், நேரு. வேறு யாருக்கும் இல்லாத இந்த வரலாறு உலகில் அண்ணாவுக்கு மட்டுமே கிட்டியது. 

இந்நிலையில்,1962ல் இந்திய – சீனப் போரின்போது அண்ணா இந்தக் கோரிக்கையை நாட்டின் ஒருமைப்பாட்டைக் கருதிக் கைவிட்டார். ‘வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும்’ என்று ஒரே வரியில் அவர் அளித்த விளக்கம் எல்லோரையும் சிந்திக்கத் தூண்டியது. 

இதனையடுத்து, 1967ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 18ஆம் நாள் அண்ணா தலைமையிலான திமுக அரசு சட்டப்பேரவையில் சென்னை மாகாணத்தைத் ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதே ஆண்டு நவம்பர் திங்கள் 23ஆம் நாள் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அண்ணாவின் அதீத முயற்சியால் சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பேரறிஞர் அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அறுவைசிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல நேரிட்டது. மருத்துவமனையில் தனக்கான அறுவை சிகிச்சையின்போது, உயிர் பிழைப்போமா…உயிர் துறப்போமா என்ற உறுதிதன்மை தெரியாத நிலையில், மருத்துவர்களிடம் அவர் ஒரு வேண்டுகோள் வைத்தார் , “எனக்கான அறுவைசிகிச்சையை ஒருநாள் தள்ளிவைக்கமுடியுமா ” என்பதுதான். மருத்துவர்கள் ஏன் என கேட்டதற்கு, அண்ணா உரைத்த பதில், ” நூல் ஒன்றை படிக்க தொடங்கி விட்டேன். அவற்றை முழுமையாக படித்து முடித்துவிட வேண்டும் என்கிற ஆவல்தான்” என்றார்.

முதலமைச்சராக இருந்தபோது, பம்பாய் (மும்பை) செல்வதற்காக தயாரானார் அண்ணா. அப்போது விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். ஏன் தெரியுமா? “10புத்தகங்கள் படிக்கவேண்டியிருக்கு. அதற்கு மூன்று நாட்கள் ஆகும். காரில் பயணம் செய்தால்தான் அவற்றையெல்லாம் முழுமையாகப் படிக்க முடியும். ஒன்றரை மணிநேர விமானப் பயணத்தில் அவற்றையெல்லாம் படிக்க இயலாது” என்றார். 

அதுமட்டுமா…”வீட்டுக்கு ஒரு பாடசாலை (நூலகம்) வேண்டும். அப்பதான், அறிவார்ந்த தலைமுறைகளை தமிழ்நாடு பெறமுடியும்” என்றார். 
சும்மாவா சொன்னார்கள்… “அண்ணா ஒரு புத்தகப் புழு” என்று.

1909ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15ஆம் நாள் பிறந்த அண்ணா, 1969ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் மூன்றாம் நாள் இவ்வுலகிலிருந்து விடைபெற்றார். அவரது இறுதி சடங்கில் ஒன்றரை கோடிபேர் கலந்துகொண்டதாக மதிப்பிடப்பட்டது. இது வேறு எந்த அரசியல் தலைவருக்கும் கிட்டாத ஓன்று. இந்நிகழ்வு கின்னஸ் சாதனையிலும் இடம்பெற்றது. இச்சாதனையை இன்றுவரை எந்த அரசியல் தலைவரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது நினைவை போற்றும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா சித்த மருத்துவமனை, அண்ணா உயிரியல் பூங்கா, அண்ணா மேம்பாலம், அண்ணா சாலை, அண்ணா சமாதி. அண்ணா நூற்றாண்டு நூலகம் என அவருக்கு தமிழ்நாடு அரசு அடுக்கடுக்காக புகழாரம் சூட்டியுள்ளன.

அறிஞர்களுக்கெல்லாம் பேரறிஞரான அண்ணாவுக்கு இன்று (03.02.2023) 54ஆவது நினைவு நாளாகும். இந்நாளில் அவரை நினைவுகூர்ந்து போற்றுவது தமிழர்களின் தலையாயக் கடமையாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.